Tuesday, June 5, 2012

4வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் : சிகிச்சையின்றி நோயாளிகள் கடும் பாதிப்பு!

Tuesday, June,05, 2012
சென்னை::சென்னை அரசு பொது மருத்துவமனையில், கடந்த 2ம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜேஷ் என்பவரை நோயாளிகளை பார்க்க வந்த வக்கீல்கள் தாக்கி உள்ளனர். இதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அன்று மதியம் முதல் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், வகுப்பு மற்றும் மருத்துவமனை பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இந்நிலையில் இன்று 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களான 750 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம முழுவதும் 1 லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், தினமும் வரும் 10 ஆயிரம் புறநோயாளிகள், 4,000க்கும் அதிகமான உள்நோயாளிகளுக்கு அரசு டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர். சிலர் வரிசையில் காத்திருக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து முதுநிலை மருத்துவ மாணவர் மற்றும் பயிற்சி டாக்டர் சங்க தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும். 4 நாட்களாக போராட்டம் நடக்கிறது. இதுவரை சுகாதார துறையினர் யாரும் பேச்சுக்கு அழைக்கவில்லை. இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது’’ என்றார். சென்னை அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கனகசபை கூறுகையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க, கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நர்சுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பணிநேரம் போக கூடுதலாக பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் உடனடியாக பணிக்கு திரும்பவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையில் உள்ள அரசு டாக்டர்கள், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இன்று கருப்பு பேட்ச் அணிந்து பணிக்கு சென்றுள்ளனர்.

இதன் பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாளை முதல் சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தவிர்த்து மற்ற அனைத்து பணிகளையும் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார். இதனால் டாக்டர்கள் போராட்டம் தீவிரம் அடையும் என்று தெரிகிறது.

ஐகோர்ட்டில் அவசர வழக்கு

வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு இன்று காலை ஆஜராகி கூறும்போது, டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது சட்ட விரோதமானது. ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டிரைக்கை கைவிட்டு வேலைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்றார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என¢றும் அவர் கோரிக்கை வைத்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யுங்கள். இன்று மதியம் விசாரிக்கிறோம் என்றனர்.

No comments:

Post a Comment