Thursday, June 7, 2012

கடல் வழியே ஆஸ்திரேலியா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 151 பேர் கைது!

Thursday,June,07,2012
திருநெல்வேலி::கேரள கடற்கரை வழியே, ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற, 151பேரை, கேரள போலீசார், கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர், தமிழக அகதிகள் முகாமில் வசிப்பவர்கள். கேரளா, கொல்லம் மாவட்டம் முக்காடு, நீண்டகரை ஆகிய கடற்கரை பகுதியில் இருந்து சிலர், குழந்தைகள், பெண்களுடன், மீன்பிடி படகுகளில், கடல் வழியே ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக, சக்தி குளங்கரா போலீசுக்கு, தகவல் கிடைத்தது. கடந்த ஞாயிறு, நள்ளிரவு 1 மணியளவில், போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில், 25 குழந்தைகள், 19 பெண்கள் உட்பட, 151 பேர் சிக்கினர். இவர்கள், தமிழகத்தில், நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட, 17 இலங்கை தமிழர் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என, தெரிய வந்தது. கொல்லம் போலீஸ் கமிஷனர், தீபேஷ் குமார் பெஹ்ரா, தமிழக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தமிழக அகதிகள் மறுவாழ்வு ஆணையருக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பதால், அவர்களை, கேரள போலீசார், போலீஸ் பஸ்களில் நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

கொல்லம் இன்ஸ்பெக்டர் கமருதீன் கூறியதாவது: இந்த, 151 பேரும், புரோக்கர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் என, பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். புரோக்கர்கள் தப்பித்து விட்டனர். இவர்களில், 27 பேர், நேரடியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு, சுற்றுலா விசாவில், அண்மையில் வந்தவர்கள். அவர்கள் எந்த முகாமிலும் சேராதவர்கள் என்பதால், அவர்களை கைது செய்து, கேரள சிறையில் அடைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். மொத்தமுள்ள, 151 பேரில், கைதானவர்கள் தவிர மற்றவர்கள், நேற்று பாளையங்கோட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மண்டபத்தில், நேற்று மதியம் உணவு வழங்கப்பட்டது. அவர்களை, ஏற்கனவே இருந்த தமிழக முகாம்களுக்கு அனுப்பி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment