Thursday, June 7, 2012

கோவை வந்த இலங்கை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இலங்கை திரும்பினார்:
இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது!

Thursday, June 07, 2012
கோவை::மத்திய அரசின் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரும்பு இனப்பெருக்க மையம் சார்பில் கோவையில் 2 நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வேளாண் விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இன்று காலை தொடக்க விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள இலங்கை சிறு ஏற்றுமதி மற்றும் பயிர் உற்பத்தித்துறை அமைச்சர் ரெஜினால்டு குருவே, நேற்று மாலை கோவை வந்தார். அவிநாசி ரோட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அமைச்சருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். அமைச்சர் வருகை உள்ளூர் போலீசாருக்குகூட தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த மதிமுகவினர் 100-க்கும் அதிகமானோர் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நட்சத்திர ஓட்டல் முன்பு இன்று காலை திரண்டனர். கருத்தரங்கு நடக்கும் கரும்பு இனபெருக்க மையம் முன்பு போராட்டம் நடத்த பெரியார் திராவிடர் கழகச் பொது செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோரும், சட்டக்கல்லூரி மாணவர்களும் குவிந்தனர். பீளமேடு, லட்சுமி மில் ஆகிய இடங்களிலும் சாலை மறியல் நடத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்தன.

கோவை மாநகர உயர் போலீஸ் அதிகாரிகள், அமைச்சரிடம் தொடர்பு கொண்டு, ‘உங்கள் வருகைக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால் உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்கிறோம்’ என்று கூறியுள்ளனர். கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. சொந்த ஊர் திரும்புவதாகவும், விமான நிலையம் வரை பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரும்படியும் போலீசாரிடம் கேட்டனர். அதன்படி, காலை 8 மணிக்கே அறையை காலி செய்துவிட்டு ஓட்டலில் தயாராக காத்திருந்தனர்.

உதவி கமிஷனர் தலைமையில் சாதாரண சீருடை அணிந்த போலீசார், அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை ரகசியமாக பின்புற வாயில் வழியாக விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காலை 10.30க்கு விமானம் மூலம் இலங்கை அமைச்சர் சென்னை சென்றார். இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வரன், மோகன்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்துக்கு வரும் இலங்கை அமைச்சர்கள், ராஜபக்சே உறவினர்கள் யாரும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் வருவதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இலங்கையில் இருந்து வருபவர்கள் முன்கூட்டியே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி, அதன் பிறகே இங்கு வர அனுமதிக்கவேண்டும் என்று பிரதமருக்கு சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், எந்த தகவலும் தெரிவிக்காமல் கோவைக்கு இலங்கை அமைச்சர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
div>

No comments:

Post a Comment