Monday, May 28, 2012

கடந்த 2004.07.07 ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்யும் நோக்கில் புலிகளால் ஏவிவிடப்பட்ட குண்டுதாரியை தண்டிக்கப்படுவதை விரும்பாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, ,May, 28, 2012
இலங்கை::குண்டுதாரிப் பெண்ணை அழைத்து வந்த சத்தியலீலா எனும் பெண் தனக்கு ஆபத்தை உண்டு பண்ணும் நோக்கில்தான் தன்னைக் காண வந்தார் என்றும் வெறுமனே தன்னிடம் உதவி பெற்றுகொள்வதற்காக அன்றைய தினம் அவர் வரவில்லை என்றும் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் அப்பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த 2004.07.07 ம் திகதி அமைச்சரை கொலை செய்யும் நோக்கில் புலிகளால் ஏவிவிடப்பட்ட குண்டுதாரியை அமைச்சர் அவர்களது அமைச்சு அலுவலகத்திற்கு அழைத்து வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட திருமதி சத்தியலீலா தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சாட்சியமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சத்தியலீலா என்பவர் தன்னிடம் தொழில் பெற்றவர் என்றும் பின்னர் தனது யாழ்.அலுவலகத்தில் அரசியல் ரீதியிலான பணிகளில் ஈடுபட்டிருந்தவர் என்றும் தெரிவித்த அமைச்சர், பிற்காலத்தில் அவர் வெளிநாடு சென்று திரும்பியதும் தன்னிடம் மீண்டும் பணிபுரிய ஆர்வம் தெரிவித்திருந்த நிலையில் அவரது நடத்தைகளில் சந்தேகங்கள் இருப்பதாக தனது உதவியாளர்கள் மூலமாக அறிந்ததன் பின்னர் அப்பெண்ணை தன்னுடைய அலுவலகத்துடன் இணைத்துக் கொள்ளாமல் விட்டதாகவும் தெரிவித்ததுடன் அவரது கஷ்டநிலை காரணமாக நிதி ரீதியிலான உதவிகளை அவ்வப்போது செய்திருந்ததாகவும் தெரிவித்தார்.

பிற்காலத்தில் தன்னை கொலை செய்வதற்கு துணைபுரியுமாறு புலிகள் சத்தியலீலாவை பலவந்தப்படுத்தியதாக சத்தியலீலா தன்னிடமும் தனது உதவியலாளர்களின் மூலமாகவும் தெரிவித்திருந்ததை எடுத்துக் கூறிய அமைச்சர், புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே இவர் குண்டுதாரிப் பெண்ணை அழைத்து வந்தார் என்பதை இப் பெண் சிறையில் இருந்தவாறு தனக்கு எழுதிய கடிதத்தின் மூலமும், சம்பவத்தின் பின்னணிகளைக் கொண்டும் தான் அறிந்த விடயங்களின் மூலமும் தன்னால் தெளிவானதொரு முடிவுக்கு வரமுடியுமாக இருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இப்பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் தன்னிடம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பலர் தன்னிடம் உதவிபெற வருவதையும் சுட்டிக்காட்டி அவ்வாறானவர்களுக்கு உதவுவது தனது வழக்கமாகும் என்றும் அவ்வாறானவர்களில் ஒருவராகவே சத்தியலீலாவும் இருந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

குண்டுதாரி பெண்மீது சந்தேகம் ஏற்பட்டதாலேயே அப்பெண் தனது அமைச்சு அலுவலக கட்டிடத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு பொலிஸ்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு இவ் விடயம் தொடர்பில் அவதானமாக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாட முயன்றதாகவும் துரதிஷ்டவசமாக தொலைபேசி அழைப்பு கிடைக்கவில்லை என்றும் இந்நிலையிலேயே கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடித்து நால்வர் கொல்லப்பட்டு பத்துப் பேர் காயமடைந்ததாகவும் சம்பவம் குறித்து தெரிவித்த அமைச்சர், இதனால் கொல்லப்பட்டவர்களுக்கு தனது அனுதாபங்களையும் நீதிபதியுடைய அனுமதியுடன் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment