Wednesday, May 2, 2012

புலி முத்திரை குத்தும் அரசாங்கத்திற்கு இடம்பெயர்ந்த மக்களை உரிய முறையில் மீள்குடியேற்ற முடியாமல் போயுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க!

Wednesday,May,02,2012
இலங்கை::வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்ப்பதற்காக அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக வழங்க முயற்சிக்கும் தீர்வுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த மே தினக் கூட்டத்தில் இணைந்துள்ள அனைத்து அணிகளும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குருநகர் புனித குறுஸ் மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக மதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்த மே தினக் கூட்டத்திற்கு அரசாங்கம் பல்வேறு அர்த்தங்களை கற்பித்தது.புலிகளுடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தில் மே தினத்தை கொண்டாடுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியது. நாட்டின் எதிர்கால சந்ததியரின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் போன்றவற்றை சிந்தித்து, எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக மதித்து, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின்; ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாண தமது ஆதரவு வழங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின்; தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட அணியினருடன் நாமும் ஆதரவு வழங்குவோம்.

நாங்கள் புலிகளுடன் மே தினத்தை கொண்டாடுகிறோம் என அரசாங்கம் குற்றம் சுமத்துமாயின், விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் கே.பி உள்ளிட்டோரை தம்வசம் வைத்துக்கொண்டு அரசாங்கம் எவ்வாறு மே தினத்தை நடத்த முடியும் என நாம் கேள்வி எழுப்புகிறோம். புலிகளுடன் மே தினம் கொண்டாடுவதாக அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்தினாலும், புலிகளை தம்வசம் வைத்திருப்பது அரசாங்கமே. தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் முயற்சிக்கும் சந்தர்ப்பங்கள் எங்கள் மீது புலி முத்திரை குத்தப்படுவது வழமையான விடயமாக மாறியுள்ளது. இவ்வாறு புலி முத்திரை குத்தும் அரசாங்கத்திற்கு இடம்பெயர்ந்த மக்களை உரிய முறையில் மீள்குடியேற்ற முடியாமல் போயுள்ளது. அந்த மக்கள் இன்னும் அகதி முகாம்களில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை விண்ணில் செலுத்தும் அரசாங்கமாக மாறியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. எம்மால் கூட தங்க முடியாத இந்த பொருட்களின் விலை அதிகரிப்பை, இடம்பெயர்ந்த மக்கள் எப்படி தாங்குவார்கள் என்பது பாரிய கேள்வியாகும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தள்ளார்.

No comments:

Post a Comment