Wednesday, May 30, 2012

முன்னாள் புலிப் போராளிகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அமெரிக்கா!

Wednesday,May,30,2012
இலங்கை::தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி போராளிகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் ஏனைய கைதிகளுக்கு எதிராக விரைவானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு நேற்றைய தினம் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் போராட்டம் நடத்திய நிலையில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட செயற்திட்டத்தில், முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இலங்கையில் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் குறைந்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போகும் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் தற்போது இடம்பெறும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அரசியல் காரணமாக இடம்பெறுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் கப்பம் பெறுதல் போன்ற குற்றச் செயல்களுக்காக ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும் கடந்த வருடத்தில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் எவ்வித பொறுப்புக் கூறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment