Thursday, May 3, 2012

உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று!:-இலங்கையில் போருக்கு பின்னரும் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை: இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!

Thursday,May,03,2012
இலங்கை::உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும், கருத்து சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு நினைவுபடுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையினால் உலகப் பத்திரிகை சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஒவ்வொரு வருடமும் மே மாதம் மூன்றாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை ஊடக சுதந்திரத்திற்காக பங்களிப்பினை வழங்கும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனஸ்கோ - கில்லெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுநலவாய ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் வன்முறைகளும், தணிக்கைகளும் ஊடகவியலாளர்களுக்கு நாளாந்தம் அச்சுறுத்தலை தோற்றுவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் பொதுநலவாய ஊடகவியலாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க உறுப்பு நாடுகளில், ஊடகங்கள் மீதான அரச ஒடுக்குமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ரீட்டா பெய்ன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் வலியுறுத்தப்பட்ட செயன்முறைத் திட்டத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட பொதுநலவாய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரீட்டா பெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஊடகவியலாளர்கள் செயற்படுவதற்கான தடைகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் பொதுநலவாய ஊடகவியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன இல்லாவிட்டால், அரசாங்கங்கள் தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுநலவாய ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போருக்கு பின்னரும் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை: இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!

போருக்கு பின்னரான காலகட்டத்திலும் ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட, காணாமல்போன, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை" என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கூறியுள்ளது.

இன்று மே 3 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஊடக சுதந்திரத்தினத்தையொட்டி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊடக நிறுவனங்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள பிணையில் விடுதலை செய்யப்படுவதும் விசாரணைகளை இழுத்தடிப்பதும் இலங்கையில் வழமையாகி வருகின்றது.
ஊடகவியலாளர்களுக்கான தொழில் பாதுகாப்புகள் உரிய முறையில் இல்லை. மிரட்டல், ஊடகவியலாளர்களை பின்தொடர்தல் போன்ற எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

ஆகவே ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசும் அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி, விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் அதற்கான உறுதிமொழிகளை வழங்கி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஒழுக்கக்கோவைகள் புதுப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும். அது குறித்து அரசாங்கம் ஊடக அமைப்புகளுடன் கலந்துரையாடுவதும் சிறப்பான ஏற்பாடாகும்.

அதேவேளை வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஊடக தொழிலை மேற்கொள்வதற்கான கருவிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வன்னி ஊடகவியலாளர்களின் நலன்களில் அரசாங்கம் மத்திரம் அல்ல பொது அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் கோரிக்கை விடுக்கின்றோம்

No comments:

Post a Comment