Wednesday, May 2, 2012

ஆளில்லாத விமானம் மூலமான தாக்குதல் நியாயமானது தான்: அமெரிக்கா கருத்து!

Wednesday, May 02, 2012
வாஷிங்டன்::பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது, ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்படும் தாக்குதல் நீதிமுறைப்படி தான் நடக்கிறது"" என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அவர்கள் ஆட்சியை ஒழித்தது. இந்த தாக்குதலில் தப்பிய தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் ஒளிந்துள்ளனர். இதே போல, நியூயார்க்கின் இரட்டைக் கோபுரத்தை தகர்த்த, அல்-குவைதா பயங்கரவாதிகளும், பாகிஸ்தானில் பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் தான் தங்கியுள்ளனர்.
எனவே, அவர்களை ஒழிக்கும் பொருட்டு, அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளத்திலிருந்து, ஆளில்லாத விமானங்களை ஏவி, அல்-குவைதா மற்றும் தலிபான்களை கொன்று வருகிறது. இந்த தாக்குதலில், அப்பாவிகள் பலரும் பலியாகி வருகின்றனர். இதற்கு, பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஆளில்லாத விமானம் மூலமாக நடத்தப்படும் தாக்குதலை, அமெரிக்கா நிறுத்தவில்லை.

இது குறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஜான் பெர்னான் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் மற்றும் ஜெர்மன் ராணுவ தளபதிகள், விமானம் மூலம் சென்று எதிரிகளை தாக்கினர். நியூயார்க் இரட்டைக் கோபுரம் போன்றவற்றை தகர்த்த பயங்கரவாதிகள், பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கின்றனர்.அவர்களை, சர்வதேச சட்டப்படி ஒழித்து வருகிறோம். ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை, சர்வதேச சட்டம் தடுக்கவில்லை. எங்கள் நாட்டை பாதுகாக்க, நாங்கள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை நியாயமானது தான்.எதிரிகள் பதுங்கியுள்ள பகுதிகளை இலக்கு வைத்துத் தான், இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில், இது போன்ற தாக்குதலில் அப்பாவிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு பெர்னான் கூறினார்.

No comments:

Post a Comment