Wednesday, May 30, 2012

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக் கோரி கருணாநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Wednesday,May,30,2012
சென்னை::மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க கோரியும் பால் விலை, பஸ், மின் கட்டணம் குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 என உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலையை குறைக்க கோரியும் தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சாரம் மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மே 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆற்காடு வீராசாமி, ஆர்.எஸ்.பாரதி, செ.குப்புசாமி, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ, வசந்தி ஸ்டான்லி எம்.பி., உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வை ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தி திமுகவினர் கோஷமிட்டனர். வடசென்னை மாவட்ட திமுக சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையம், மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment