Wednesday, May 30, 2012

சென்னையில் தட்டுப்பாடு நீங்கியது பெட்ரோல், டீசல் சப்ளை சீரானது!

Wednesday,May,30,2012
சென்னை:.கப்பல்களில் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டதையடுத்து சென்னையில் தட்டுப்பாடு நீங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் கடந்த 23ம்தேதி லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அப்படிபட்ட சூழ்நிலை உருவானால் அதிக விலை கொடுத்து வாங்கிய பெட்ரோலை குறைத்து விற்க நேரிடும் என்பதால் பெட்ரோலை வாங்கி விற்க பங்க் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். எனவே, சென்னையில் உள்ள 80 சதவீதம் பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டு வைத்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.

இருந்தாலும் அதிக பணம் கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடால் கடந்த 5 நாட்கள் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நிலைமையை சீராக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் கப்பல்கள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று 2 கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அதில் கொண்டு வரப்பட்ட பெட்ரோல், டீசலை பங்க்குக்கு கொண்டு செல்லும் பணி நேற்றிரவு முழுவதும் நடந்தது. மேலும் 3 கப்பல்கள் ஓரிரு நாளில் வருகிறது. பெட்ரோல், டீசல் கிடைக்கத் தொடங்கியதால் பங்க்குகளில் நேற்றிரவு முதல் படிப்படியாக கூட்டம் குறைந்தது. இன்று காலை முதல் பங்க்குகளில் கூட்டம் முழுமையாக குறைந்து நிலைமை சீரானது. பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி சென்றனர்.

No comments:

Post a Comment