Thursday, May 31, 2012

45 நாள் தடை காலம் முடிந்தது : மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்!

Thursday,May,31,2012
வேதாரண்யம்::மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 12 ஆயிரம் பேர் நேற்றிரவு முதல் கடலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். 45 நாட்களுக்கு பிறகு மீன்பிடி தொழில் மீண்டும் களை கட்டி உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் 45 நாள் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 15,ம் தேதி தொடங்கிய தடை காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். நேற்று மாலையே படகுகளை கடலுக்கு கொண்டு வந்து அதில் ஐஸ் பெட்டி, வலை உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை ஏற்றினர். பின்னர் கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 350 விசைப்படகுகளில் சுமார் 2000 மீனவர்கள் நேற்றிரவு கடலுக்கு சென்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.

முதல்கட்டமாக 200 விசைப்படகுகளில் 1000 பேர் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து 650 படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நாகை, கோடியக்கரை, வேதாரண்யம், புதுப்பட்டினம், தரங்கம்பாடி, பழையாறு, பூம்புகார், வாணகிரி பகுதிகளில் உள்ள மொத்தம் 969 விசைப்படகுகளில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.
இன்று கடலுக்கு சென்ற மீனவர்களில் பெரும்பாலானவர்கள் நாளை காலை கரைக்கு திரும்புவர். 45 நாட்களுக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்றுள்ளதால் அதிக அளவு மீன்களுடன் மீனவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து பெரிய வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களும் வரத் தொடங்கி விட்டனர். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதமாக மார்க்கெட்களில் அதிக அளவில் மீன்கள் வரவில்லை. கரையோரத்தில் பிடிக்கப்படும் சிறிய மீன்களும் ஆறு, ஏரிகளில் பிடிக்கப்பட்ட மீன்களும்தான் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்ந்தது. இந்நிலையில் நாளை முதல் மீன்கள் வரத்து அதிகம் இருக்கும் என்பதால், விலையும் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment