Monday, May 28, 2012

வவுனியாவில் 27-28/05/2012இல் நடைபெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

Monday, ,May, 28, 2012
இலங்கை::வவுனியாவில் 27-28/05/2012இல் நடைபெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புதிய அக-புற அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.

1.இலங்கைத் தீவில் புரையோடிப் போயுள்ள, கடந்த அறுபது வருடங்களாக பல்வேறு அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் கரணமாக அமைந்த அரசியல் முரண்பாட்டுக்கான தீர்வு அணுகுமுறையில்; ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பின்வரும் விடயங்களில் உறுதி பூணுகிறது.

அ) தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான, நியாயமான நிரந்தரத் தீர்வொன்றை எட்டும் பொருட்டு தொடர்ந்தும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சித்து இலக்கை அடைதல்.

ஆ) போருக்கு பின்னரான புதிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அரசியல் கூட்டு முன்னனி ஒன்றிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்தல். இன்றைய சூழலில் அத்தகையதொரு கூட்டு முன்னனியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில், தமிழ் மக்களின் நலன்சார்ந்து இயங்கிவரும் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.

2. போருக்கு பின்னரான புதிய பூகோள அரசியல் சூழலில், சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியிருக்கும் நிலைமையை சாதகமாகக் கொண்டு, இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக முயற்சித்தல்.

3. அ) தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பூரணமாக பேணிப்பாதுகாக்க முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

ஆ) அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்கி அவர்களை விடுதலை செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது.

இ) அனைத்து இயக்கங்களின் முன்னாள் போராளிகளும், மீண்டும் சமூகத்துடன் ஒன்றித்து வாழக் கூடிய வகையில், அவர்களது சமூக பொருளாதார வாழ்வை வளப்படுத்துவதற்கான உதவிகளை அரசிடமிருந்தும், புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் பெறுவதற்கு முயற்சித்தல்

4. மீள்குடியேறிய மக்களினதும், மீள்குடியேற காத்திருக்கும் முகாம்களில் வாழ்ந்;துவரும் மக்களினதும் வாழ்வாதார நிலைமையை விருத்தி செய்யவும், அவர்களுக்கான அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித் கொடுக்கவும் இயலுமான அனைத்து வழிகளிலும் முயற்சித்தல்.

5. போரில் காயமுற்று அங்கவீனமடைந்த அனைவருக்கும் (பொதுமக்கள், போராளிகள்) தேவைப்படும் அத்தியாவசிய வசதிகளையும், பூரண மருத்துவ உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக பாடுபடுதல்

6. வட-கிழக்கின் முக்கிய பொருளாதார வளங்களான விவசாயம், மீன்பிடி என்பவற்றை நவீனமயப்படுத்துவதுடன் கைத்தொழில் அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

7. வட-கிழக்கில் குறிப்பாக யுத்தத்தால் பாதிப்புற்ற பிரதேசங்களில் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடுபடுதல்.

8. யுத்தத்தில் கணவனை இழந்த விதவை பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உழைத்தல்.

9. இலங்கையில் இருக்கும் சகல சமூகங்களினதும் மனித உரிமைகளையும், சமூக நீதியையும் பேணுவதுதற்காக உழைப்பதுடன், சமூக, வர்க்க, பால் ரீதியான ஏற்றத்தாழ்வுகளை இல்லாது ஒழிப்பதற்காக தனித்தும், இலங்கையின் அனைத்து முற்போக்கு அரசியல் மற்றும் சமூக சக்திகளுடனும் இணைந்து பாடுபடுதல்.

10. சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்து போராட்டங்களுக்கும் சாத்தியமான வகைகளில் ஆதரவளித்தல்

(புளொட் ஊடகப்பிரிவு)

No comments:

Post a Comment