Sunday, April 29, 2012

கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா?கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியும் கசப்பான விமர்சனங்களும்!

Sunday, April 29, 2012
இலங்கை::சீரசியல் நீரோட்டத்தில் தாக்குப்பிடிக்குமா தமிழ்க் கூட்டமைப்பு? விமர்சனங்கள் எப்போதுமே கசப்பானவை. இதன் காரணமாகத்தான் நமது சூழலில் விமர்சனங்கள் என்றவுடன் நம்மையறியாமலே நாம் முகத்தை சுழித்துக் கொள்கிறோம்.

ஒரு நோயாளி தனது நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கசப்பான மருந்துகளை உட்கொள்ள பின் நிற்பதில்லை. மருந்து கசப்பானது என்று எண்ணி தயங்கினால் நோய் இறுதியில் நோயாளியை முழுவதுமாக விழுங்கிவிடும். ஒரு கட்சியின் மீது அல்லது அரசியல் நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்களும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

விமர்சனங்களை எதிர் மனோபாவத்துடன் அணுகும் அமைப்புக்கள் அனைத்தும், இறுதியில் தமது வீழ்ச்சியை தாமே வலிந்து வரவழைத்துக் கொள்கின்றன. விமர்சனங்கள் கசக்கும் என்பதால் புலிகள் அதனை ஒரு போதுமே விரும்பியிருக்கவில்லை. அதனையும் மீறி விமர்சித்தவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும் அரசின் கைக்கூலிகள் என்றுமே வர்ணிக்கப்பட்டனர்.

இதன் விளைவு மிகவும் பிரமாண்டமாகத் தோற்றம் காட்டிய புலிகள் மூன்றே வருடங்களில் அழிய நேர்ந்தது. புலிகளின் அழிவு என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஒரு கல்வெட்டுப் படிப்பினை. புலிகள் விமர்சனங்களை புறம்தள்ளி செயற்பட்ட காலத்தில் எங்களிடம் ஒரு கருத்திருந்தது. அதற்கு இந்த பத்தியாளரும் விதிவிலக்கானவர் அல்ல. இருக்கும் ஒன்றையும் விமர்சித்துவிட்டு நாம் என்ன செய்வது கூனோ, குருடோ ஏற்றுக் கொண்டு போவோம். இன்று நமக்கு முன்னால் மீண்டும் அத்தகையதொரு கருத்து ஊசலாடுகிறது. முன்னர் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. ஆனால் முன்னர் நாம் செய்த தவறையே மீண்டும் செய்வதா? இந்தப் பத்தி த.தே.கூட்டமைப்பின் சமீபகால போக்குகள் குறித்து காய்த்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றை முன்வைக்க முயல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன? த.தே.கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா? இது அடிப்படையில் சிறுபிள்ளைத்தனமான கேள்வி போன்று தெரியலாம். ஆனால் இந்த பத்தியாளர் இத்தகையதொரு கேள்வி நோக்கி வருவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. த.தே.கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாலேயே, நமக்கு சிறுபிள்ளைத்தனமான கேள்விகளும் அவசியப்படுகின்றன.

நாம் அறிந்த வகையில் த.தே.கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிbழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிbழ விடுதலைக் கழகம் ஆகிய ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பாகும். ஆனால் இதில் அடங்கியுள்ள சித்தார்த்தன் தலைமையிலான தமிbழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கவில்லை. புலிகளின் ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றக் கொண்டவர்கள் மட்டுமே ஆரம்பத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். ஆனால் சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அத்தகைய ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றுக் கொண்டி ருக்கவில்லை. எனினும் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்ச் சூழ லில் ஏற்பட்ட அரசியல் பாலைவன நிலைமையை கருத்தில் கொண்டு கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் முடிவை அவர்கள் எடுத்தனர். அடிப்ப டையில் இது ஒரு முன்னேற்றகரமான முடிவு. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த பத்தியாளர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஆனால் இந்த முன்னேற்றகரமான வாய்ப்பு சரியான முறையில் கையாளப்படுகின்றதா என்பதுதான் இன்றுவரை விடையற்ற வினாவாகத் தொடர்கிறது. ஒரு சுவாரசியமான உதாரணத்தை தருகிறேன். த.தே.கூட்டமைப்பு இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது எவ்வாறு சந்தித்தது என்னும் செய்தி எவருக்கும் தெரியாது. த.தே.கூட்டமைப்பின் ஒரு குழுவினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துவிட்டு வெளியில் வரும்போது த.தே.கூட்டமைப்பின் பிறிதொரு குழு அவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு இதற்குப் பின்னர்தான் தெரிந்திருக்கிறது. த.தே.கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல. அது ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பு என்று. இந்த உதாரணம் த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான சரியானதொரு தலை மைத்துவத்தை வழங்குகின்றதா அல் லது இல்லையா என்பதை விளங்கிக் கொள்வதற்கு போதுமானதாகும்.

சமீபத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் வெளியான கூட்டமைப்பின் கருத்துக்கள், அதன் சிறந்த தலைமைத்துவத்திற்கு பிறிதொரு சிறந்த உதாரணம் ஆகும். த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்றவாறு அறிக்கை வெளியிட, சில தினங்களுக்கு பின்னர் த.தே.கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இரா. சம்பந்தன் அத்தகையதொரு மூன்றாம் தரப்பு அவசியமில்லை என்றவாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பிறிதொரு மிகச் சிறந்த ஆனால் புல்லரிக்க வைக்கும் உதாரணமொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த புல்லரிப்பிற்கு சொந்தக்காரர் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிவஞானம் சிறிதரன் ஆவார். இம்மாதம் மதுரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சிறிதரன் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருக்கின்றார் அவர் மீண்டும் வருவார் என்று தெரிவித்திருக்கின்றார். புலம்பெயர் சூழலில் இயங்கிவரும் ஒரு சில புலி ஆதரவுக் குழுக்கள் கூறிவந்த விடயத்தை தற்போது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான விடயமாகும். இது த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல அதன் அரசியல் நிலைப்பாட்டையும் கூட கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.

ஒருபுறம் அரசு வடகிழக்கை இராணுவமயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வரும் கூட்டமைப்பினர் மறுபுறம் பிரபாகரன் வருவார் என்றும் கூறுவது என்ன வகையான அரசியல்? பிரபாகரன் மீண்டும் இயங்கக் கூடிய ஆற்றலுடன் இருப்பது உண்மையானால் அரசு வடகிழக்கில் தனது இராணுவ நிலைகளை பலப்படுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும்? இப்படியொரு வாதத்தை தெற்கு முன்வைக்குமாயின் நமது நிலைமை என்னவாகும்? உண்மையில் த.தே.கூட்டமைப்பு அரசியல் செய்கின்றதா அல்லது வேறு ஏதேனும் செய்கின்றதா என்பதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களே தெளிவுபடுத்த வேண்டும்.

த.தே.கூட்டமைப்பிற்குள் நிலவும் இவ்வாறான ஒழுங்கற்ற போக்குகள் அதன் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல தமிழ் மக்களை (இங்கு மக்கள் என்று நான் குறிப்பிடுவது வடகிழக்கில் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்களாகும். மேலும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கே துணை புரிகிறது. கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். சமீப காலமாக அரசும், தெற்கின் சிங்கள தேசியவாத சக்திகளும் கூட்டமைப்பு குறித்து தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை, கூட்டமைப்பினர் தங்களது கருத்துக்கள் மூலமாகவும் செயற்பாடுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தி வருவதை நாம் காணலாம். சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளை பொறுத்தவரையில், த.தே.கூட்டமைப்பினரை புலிகளின் நீட்சியாகவே பார்க்கின்றனர். ஆயினும் புலிகள் மீது விமர்சனமுள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி போன்றோர் கூட்டமைப்புடன் இணைந்து நிற்பதால் எழுந்தமானமாக கூட்டமைப்பை புலிகளுடன் தொடர்படுத்தி நிராகரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.

புளொட் மற்றும் த.வி.கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளுமே த.தே.கூட்டமைப்பின் பன்முகத் தன்மையின் சாட்சியாக இருக்கின்றன. இது ஒரு சாதகமான அம்சமாகும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை ஆரம்பித்திலிருந்தே மேற்படி இரண்டு கட்சிகளின் சமகால முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டிருக்கவில்லை. முக்கியமான முடிவுகள் எவற்றிலும் மேற்படி இரண்டு கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை த.தே.கூட்டமைப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமாக இருக்கின்றதே தவிர, அது கட்சிகளின் கூட்டாக இன்றுவரை செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடத்தில் தெற்கின் தேசியவாத சக்திகள் கூட்டமைப்பு குறித்து பேசிவரும் இரண்டு விடயங்களை கூட்டமைப்பினர் மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.

கூட்டமைப்பினர் புலிகளின் நீட்சியாகத் தொழிற்படுகின் றனர் மற்றும் அவர்கள் புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலில் செயலாற்று கின்றனர் என்பதே தெற்கின் பொது வான குற்றச்சாட்டுக்களாக இருக்கின் றன. புலிகள் இருந்த காலத்தில் த.தே. கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதைத் தவிர்த்த ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளின் போது நிராகரிக்கப்படுவதானது தெற்கின் விமர்சனங்களையே நியாயப்படுத்துகின்றது. தவிர குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பில் தொடர்ந்தும் இடம்பெறுவதை விரும்பவில்லை என்பதையும் நாம் இந்த இடத்தில் ஒப்பு நோக்கலாம். உண்மையில் த.தே.கூட்டமைப்பில் தற்போது சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் வகிக்கும் இடமானது முன்னர் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரன் புலிகளுடன் இணைந்திருந்தபோது வகித்துவந்த இடத்திற்கு ஒப்பானதாகும். தனது ஒரு தரப்பினரின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் பிரபாகரனுடன் இணைந்து கொண்ட பாலகுமாரன் இதுவரை எந்தவொரு பொறுப்புக்களுமற்று முக்கியஸ்தர் என்னும் அடைமொழியுடன் தனது காலத்தை கழித்திருந்தார்.

புலிகளின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தது போன்று சித்தார்த்தனும் ஆனந்தசங்கரியும் த.தே.கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது சந்தேகமே! உண்மையில் இது ஒரு மிக முக்கியமான காலகட்டமாகும். இந்தக் காலத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு த.தே.கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவருக்கும் உண்டு. தற்போது கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் இரா. சம்பந்தன் சில விடயங்களில் மிகவும் நிதானமான போக்கை கொண்டிருந்தாலும், அவரது கருத்துக்களை மறுதலிக்கும் வகையிலான அபிப்பிராயங்கள் கூட்டமைப்பிற்குள் இருந்தே வந்தவண்ணமிருக்கின்றன. சிறிதரனின் கருத்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே தமிழ் நாட்டில் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்த நிலையில் அதற்கு முற்றிலும் மாறான வகையில் சிறிதரனின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த சிறிதரனின் பேச்சு இரா. சம்பந்தனை பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளிவிடலாம். அது சம்பந்தனின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும். அதேவேளை அவரது நிதானமான அரசியல் நகர்வுகளையும் பரிகாசிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலைமை தொடருமாயின் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே! பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைவர் உண்மையிலேயே சம்பந்தன்தானா என்று ஒருவர் சிந்திக்கும் அளவிற்கே தற்போதைய நிலைமைகள் வெளித்தெரிகின்றன.

க. சிவராசா

No comments:

Post a Comment