
இலங்கை::திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈபிடிபி உறுப்பினரை ஒருவரை வெட்டிக்கொலை செய்தது, தென் இந்தியாவில் இருந்து சென்ற ஆயுதக்குழுவொன்று என விசாரணைகளில் கண்டறிந்துள்ள காவற்துறையினர், அந்த குழுவுடன் தொடர்புடைய மூன்று நபர்களை கைதுசெய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி பெரியகுளம் பகுதியில் ஈபிடிபி உறுப்பினரை கொலை செய்த அந்த ஆயுதக் குழு, சடலத்திற்கு அருகில், துரோகிகளுக்கு மரணம், நாம் மீண்டும் வேலையை ஆரம்பித்து விட்டோம் என தமிழில் எழுதிய அட்டை ஒன்றை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த ஆயுதக்குழுவினர், தென் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கை சென்று இந்த கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் ரகசியமான முறையில் மீண்டும் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதும் அது கைக்கூடவில்லை. இதனால் கிழக்கு மாகாணத்தில் மறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி குழுவினர் கொலை செய்த முத்து என்ற ரகுநாதன் முச்சக்கர வண்டி சாரதியாவார். இவர் சில காலம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததுடன், பின்னர், ஈபிடிபியுடன் இணைந்து கொண்டார். இவரது கொலை தொடர்பாக மயூரி தினேஷ் என்ற பெண்ணை காவற்துறையினர், கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்தனர். கொலை செய்யப்பட்டவர், இந்த பெண்ணின் கணவருக்கு நெருக்கமானவர் என விசாரணைகளின் போது, பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது சிறிய தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்.
தனது கணவருடன் கோபி, கோகிலன் ஆகிய நண்பர்கள், வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததாக கைதுசெய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான தினேஷ் குமார் ஆயுத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் அவர் இந்தியாவில் பயிற்சி பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகியிருந்ததுடன், அவர்களை கைதுசெய்ய காவற்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதேவேளை திருகோணமலை, 3 ஆம் கட்டை அலஸ் தோட்ட காவற்துறை சோதனை சாவடியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவரே, ஈபிடிபி உறுப்பினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைதுசெய்யப்படவிருந்த கோகிலன் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து தினேஷ் குமார் மற்றும் ராசு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் மூவரும், தென்னிந்தியாவில் உள்ள முகாம் ஒன்றில் ஒன்றாக பயிற்சி பெற்றுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment