Wednesday, March 28, 2012

இலங்கை"நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற இன ஐக்கியம் வேண்டும்-ஈ.பி.டி.பி.கட்சியின் மத்திய குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Wednesday,March,28,2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் வெல்லப்பட வேண்டுமேயானால் இனங்களுக்கிடையிலான நல்லுறவும் ஐக்கியமும் நிலவுகின்ற சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன முரண்பாடுகளை வளர்ப்பதன் ஊடாக அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதே கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள்' என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் மத்திய குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் அமெரிக்கத் தீர்மானம் வெற்றியடைந்திருப்பதாக எழுப்பப்பட்டு வரும் பெருமிதங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற மன விருப்பங்களும் நடைமுறைகளும் இருப்பதாக தெரியவில்லை.

மாறாக தமது சுயலாப எண்ணங்கள் நிறைவேறியிருப்பதான அர்த்தமற்ற வெற்றுக்கோசங்களும் கூச்சல்களுமே அதில் வெளிப்பட்டு வருகிறது.

எமது மக்கள் பட்ட வதைகளும், வலிகளும் ஆற்றப்பட வேண்டுமேயானால் அவற்றுக்கு ஈடாக தீராப்பிரச்சினையாக நீடித்து வரும் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டு எமது மக்களை நிம்மதியாகவும், சுதந்திர பிரஜைகளாகவும் நாம் வாழ வைக்க வேண்டும். மாறாக பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக நாம் எதையும் சாதித்து விடமுடியாது. இழப்புக்களை சொல்லி அழுவதால் மட்டும் இழப்பில் இருந்து எமது மக்கள் நிமிர்ந்தெழவும் முடியாது.

எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வரும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறைகளும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவேதான் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் இலட்சிய நோக்கோடு நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு பகிரங்கமாகவே கூறி வந்திருக்கின்றோம். அமெரிக்க தீர்மானத்திற்கு முன்னதாகவே நாம் இந்த இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தோம்.

ஆனாலும், நாம் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் பாதுகாத்துக் கொண்டே எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

காரணம், சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் நடைமுறைப்படுத்திவிட முடியாது. எந்தவொரு சர்வதேச அழுத்தங்கள் கூட இலங்கைத்தீவில் இன முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு எதையும் சாதித்துவிடவும் முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த தலைமைகளின் திட்டமிட்ட நடைமுறைகள் இவ்வாறான சிக்களுக்குள்ளேயே எமது மக்களை தள்ளிவிட்டிருக்கிறது.' இந்த யதார்த்தங்களை உணர்ந்து செயலாற்ற முடிந்தால் மட்டுமே நாம் அரசியல் தீர்வு பெற்று நிமிர்ந்தெழ முடியும்.

ஆனாலும் வழிகளும் வாய்ப்புகளும் இருந்தும் கடந்த காலங்களில் இந்த நடைமுறை யதார்த்தங்கள் தமிழ் பேசும் தலைமைகளால் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு செயற்படுத்த மறுத்த காரணத்தினாலுமே அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் அமெரிக்கத் தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கூறப்பட்டிருந்தாலும், திட்டமிடப்பட்ட உள்நோக்குடன் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் இதில் இன முரண்பாடுகளை தூண்டிவிடும் பாதகமான சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது.

அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆளும் கட்சி முற்படும் போது, எதிரணிகள் அதற்கு எதி;ராக கிளர்ந்தெழும் கடந்த கால அரசியல் குழப்பங்களை அமெரிக்க தீர்மானமும் அதனால் உருவாகி வரும் இன முரண்பாட்டுச் சூழலும் தோற்றுவித்து விடுமோ என்ற அச்சம் இங்கு மீண்டும் நிலவுகின்றது.

ஆகவேதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்திருந்தோம். அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற நோக்கில் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டியது எமது கடமையாகும்.

தமிழ் பேசும் மக்களின் சார்பில் ஒரு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும், எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்த இன ஐக்கிய சூழலை பாதுகாக்கவுமே நாம் அரசாங்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்து ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தோம்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்மைப்போல் அன்றி ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனாலும் முன்னுக்கு பின் முரணாக பேசும் தெளிவற்ற நிலைப்பாட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழமைபோல் தமிழ் பேசும் மக்களை வழி நடத்த தவறிவிட்டனர்.

ஆகவே எமது அரசியலுரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களுக்கு சரியான வழிகாட்டலை கொடுக்க வேண்டிய வரலாற்று கடமை தொடர்ந்தும் எம் மீதே சுமத்தப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட அரசியலுரிமை தீர்வு முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்து விட்ட அனுபவங்களை நாம் கற்றுக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் பாதையில் தொடர்ந்தும் நாம் எமது மக்களை வழி நடத்தி செல்வோம்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் வெற்றியடையாமல் போயிருந்தாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது.

எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்து நாம் ஒரு வேலைத்திட்டத்தை வகுத்து செயற்பட்டு வருகின்றோம். எமது வேலைத்திட்டத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் ஒத்து வருவதால் அதை நடைமுறைப்படுத்துமாறு நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு விடுத்திருக்கும் அந்த அறிக்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடிந்த அம்சங்களை கொண்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நாம் எண்ணுவதற்கு காரணம் எமது விருப்பங்களே அன்றி யாருடைய அழுத்தங்களும் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment