Thursday, March 1, 2012

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கூடங்குளம் அணு நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் சந்திப்பு!

Thursday, March 01, 2012
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவை, அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையிலான 4 பேர் குழு சந்தித்து பேசியது. அப்போது கூடங்குளம் பகுதிக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3,500 கோடிக்கும் அதிகமான செலவில் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து, 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான முதல் யூனிட் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக அணுமின் நிலையத்தை செயல்படவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் நிபுணர் குழு கூடங்குளம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தது. அந¢த குழு, அப்பகுதி மக்களிடம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று எடுத்து கூறினர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் கூடங்குளம் சென்று பார்வையிட்டு, மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, தமிழக அரசும் ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் அணுமின் சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் இனியன் உள்ளிட்ட 4 பேர் குழுவை அமைத்தது. அவர்களிடம், தமிழக நிபுணர் குழுவினர் கடந்த 18ம் தேதி கூடங்குளம் சென்று ஆய்வு செய்தது. இது தொடர்பான அறிக்கையை நிபுணர் குழு, நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கியது.

இந்நிலையில், அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் வக்கீல் சுப்பிரமணியன், புஷ்பராயன், டாக்டர் ரமேஷ் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடந்தது.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசி விட்டு வெளியே வந்த கூடங்குளம் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரை சந்தித்து எங்கள் தரப்பு வாதங்களை, கருத்துக்களை முன் வைத்தோம். தமிழக அரசு மின்சார சிக்கன நடவடிக்கைக்காக எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டினோம். தானே புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கூடங்குளம் பகுதி மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பேராசிரியர் இனியன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு 2 மணி நேரம் மட்டுமே கூடங்குளம் பகுதியை பார்த்தது. எங்கள் பகுதி மக்களின் கருத்துக்களையோ, எங்கள் குழுவையோ சந்தித்து கருத்து கேட்காமல் சென்று விட்டது. அந்த குழுவின் அறிக்கை ஒருதலைபட்சமானது. மக்கள் அச்சம் நீங்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த பணிகளும் நடைபெறக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதை மீறும் வகையில் கூடங்குளத்தில் ரகசியமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

எனக்கோ, கூடங்குளம் போராட்ட குழுவினருக்கோ எந்த வெளிநாட்டு நிறுவனங்களுடனும் தொடர்பு கிடையாது. மத்திய அரசு எங்கள் மீது உளவியல் போர் நடத்தி வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் எங்களுக்கு பண வெறியோ, பதவி வெறியோ கிடையாது. எம்எல்ஏ, எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையும் கிடையாது.

கூடங்குளம் அணுமின் நிலைய கட்டிடம் பற்றி மட்டும் எங்களுக்கு கவலை இல்லை. அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் பற்றி எந்த விஞ்ஞானிகளும் சரியான கருத்து கூறவில்லை. சிலர் சிறிதளவு மட்டும் கழிவுகள் வெளிவரும் என்கிறார்கள். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவுகள் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் என்கிறார். அணுமின் நிலையத்தை குளிர்விப்பதற்காக கடலில் இருந்து எடுக்கும் தண்ணீர் சூடாக்கப்பட்டு கதிர்வீச்சுடன் மீண்டும் கடலில் கலக்கும். இதனால் எங்கள் பகுதி மக்கள் மீன்பிடிக்க முடியாமல், அவர்களுக்கு உணவு பிரச்னை ஏற்படும்.

அணுமின் நிலையத்துக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் 30 கி.மீ. சுற்றளவுள்ள 15 லட்சம் மக்களை மத்திய அரசு உடனடியாக எப்படி காப்பாற்ற முடியும். கூடங்குளம் அணுமின் நிலையம் 100 சதவீதம் பாதுகாப்பானது இல்லை என்று ஆதாரத்துடன் எடுத்துக் கூறினோம். தற்போதுள்ள அணுஉலையை இயற்கை எரிவாயு மின்உலையாக மாற்ற முடியும் என்றும் சொன்னோம்.

எங்கள் பகுதி மக்கள் தமிழக முதல்வரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். கூடங்குளம் பகுதியை முதல்வர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கூடங்குளம் பகுதி மக்களின் கோரிக்கை பற்றி பரிசீலிப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். எனது சொத்து, வங்கி கணக்குகளை முதல்வரிடம் காண்பித்தேன்.
எங்களது கோரிக்கைகளை முதல்வர் மிகுந்த பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டுக் கொண்டார்.

நாங்கள் அவரிடம் கொடுத்துள்ள அறிக்கை மற்றும் புத்தகங்களை கண்டிப்பாக படிப்பதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை பற்றியோ, தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றியோ எங்களிடம் முதல்வர் பேசவில்லை. எங்களுக்கு மறைமுகமாக எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. தமிழக முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சாதாரண, சாமான்ய மக்கள் முதல்வரைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மிகுந்த நம்பிக்கையுடன் திரும்பி செல்கிறோம்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.

சிதம்பரத்துக்கு பதில்

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்மன் சுற்றுலா விசா வாங்கி இந்தியா வந்துள்ளார். ஆனால் அவர் சுற்றுலா பயணி போல் நடக்கவில்லை என்று கூறி இருக்கிறாரே? என்று உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “அவரை ஜெர்மனிக்கு ரகசியமாக அனுப்பி விட்டு இப்போது அப்படி பேசுவது சரியல்ல. அவர் இந்தியாவில் இருக்கும்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் அவரை ரகசியமாக அனுப்பி விட்டு குற்றச்சாட்டு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார் உதயகுமார்.

No comments:

Post a Comment