Wednesday, March 28, 2012

பேட்டரி சாதனம் அறிமுகம் கால் இழந்தவர்கள் நடக்கலாம்!!

Wednesday,March,28,2012
இஸ்தான்புல்::பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய ரிமோட் கன்ட்ரோல் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துருக்கியை சேர்ந்த ஏஎம்எஸ் மெக்கட்ரோனிக் நிறுவனத்தை சேர்ந்த நெகாடி ஹசிகாடிரோகுலு என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் நடந்த தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு ‘டெக்’ என்ற சாதனத்தை வடிவமைத்துள்ளனர். இது பேட்டரி உதவியுடன் இயங்குகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். ஒரு அடி உயரம், 2 அடி நீளத்தில் மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கால்களை இழந்து அவதிப்பட்டு வரும் யூசுப் அக்தர்கோக்லு (27) என்பவரை கொண்டு இதன் செயல்பாடுகள் சோதிக்கப்பட்டது. மிகவும் உதவிகரமாக இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்பு குதிரையில் இருந்து விழுந்ததில் கால்களை இழந்தேன். அது முதல் வீல்சேர்தான் என் வாழ்க்கை என்றாகிவிட்டது. என்னை போன்றவர்கள் எப்போதும் உட்கார்ந்தே இருப்பதால் உடல்பருமன், சர்க்கரை நோய், பெட்சோர் ஆகியவற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். அது மட்டுமின்றி, உட்கார, நடக்க, வெளியே சென்று வர, சொந்த காரியங்களை செய்துகொள்ளக்கூட மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை. அத்தனை கஷ்டங்களையும் போக்கும் வகையில் இருக்கிறது ‘டெக்’ சாதனம். நினைத்த நேரத்தில் எழுந்திருக்க முடிகிறது. மற்றவர் துணையின்றி வெளியே செல்கிறேன். எளிதாக குனிந்து நிமிர முடிகிறது. அயர்ன் செய்வது, வாக்வம் கிளீனர் வைத்து வீட்டை சுத்தம் செய்வது, கடைக்கு சென்று ஷாப்பிங் செய்வது என எல்லா வேலையும் செய்ய முடிகிறது. ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது கூடுதல் வசதி. ஆக மொத்தம், கால்கள் இல்லை என்பதே மறந்துவிடுகிறது. இவ்வாறு யூசுப் கூறினார். இறுதிக்கட்ட ஒப்புதலுக்கு பிறகு இந்த சாதனத்தை மெக்கட்ரோனிக் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

No comments:

Post a Comment