Thursday, March 29, 2012

கூடங்குளம் போராட்டக் குழு அமைப்பாளர் உதயகுமார் வீட்டில் திடீர் ரெய்டு!

Thursday,March,29,2012
நாகர்கோவில்::கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் மத்திய உள்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து உதயகுமார் தலைமையிலான குழுவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணுமின் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை கண்டித்து இடிந்தகரையில் உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். 9 நாட்கள் போராட்டம் நீடித்தது. போராட்ட குழு பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது. அதே நேரத்தில், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள போராட்ட குழுவினரை விடுவிக்கும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என உதயகுமார் அறிவித்தார்.

அதன்படி, அங்கு போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஏற்கனவே கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி இருந்தது. இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி சில தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்தது. மேலும் நாகர்கோவிலில் தங்கியிருந்த அணுமின் நிலைய எதிர்ப்பாளர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சன்டெக் ரெய்னர் நாடு கடத்தப்பட்டார். அவர் உதயகுமார் உள்ளிட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் உதயகுமார் வீட்டில் இன்று ரெய்டு நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment