Wednesday, March 28, 2012

சர்வதேச கடல் எல்லையில் ரோந்து அதிகரிப்பு: ராமநாதபுரம் மீனவர்களுக்கு இந்திய கடற்படையினர் எச்சரிக்கை!

Wednesday,March,28,2012
ராமநாதபுரம்::கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் தொடர வாய்ப்பு உள்ளது என, உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை எச்சரித்து, திருப்பி அனுப்புகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவாக ஓட்டளித்ததை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. இதுகுறித்து, கடலோர மாவட்டங்களில் உள்ள உளவுப் பிரிவினர், விசாரணை மேற்கொண்டனர். எல்லை தாண்டும் மீனவர்களுக்கு, தொடர்ந்து பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் சமாளித்துவிட்டால், ஏப்., 14 முதல் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்பதால், நீண்ட இடைவெளிக்கு பின், தாக்குதல் தொடராது என, அரசிடம், அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். இதை தொடர்ந்து, மரைன் போலீசார், கடலோர காவற்படை, இந்திய கடற்படையினர், நடுக்கடலில் ரோந்து பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டும் தமிழக மீனவர்களை எச்சரித்து, இந்திய கடல்பகுதியில் மீன்பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்திய கடல் எல்லையை தாண்டும் மீனவர்களுக்கு, டோக்கன் நிறுத்துவதுடன், இதர சலுகைகளை நிறுத்தி விடுவோம் என, எச்சரிக்கை செய்யுமாறு மீன் துறையினருக்கு, அரசு அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment