Friday, March 30, 2012

லாக்கப் மரணம் குறித்து விசாரணை போலீசார் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை-முதல்வர் ஜெயலலிதா!

Friday, March, 30, 2012
சென்னை::லாக்கப் மரணத்தில் போலீசார் தவறு செய்தது தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா ஒரு பிரச்னை குறித்து பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அண்ணாதுரை, நேற்று அவையில் பேசும்போது, கடந்த 9 மாத அதிமுக ஆட்சியில் 11 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன என்றார். 2011 மே மாதத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 4 லாக்கப் மரணங்கள்தான் நடந்துள்ளன. இந்த 4 மரணங்களுக்கும் காவல் துறையினர் காரணமா என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது. ஒரு சம்பவத்தில் காவல்துறையினர் மீது தவறு இல்லை என விசாரணை கமிஷன் நீதிபதி அறிக்கை அளித்துள்ளார். மற்ற 3 சம்பவங்கள் குறித்த அறிக்கை இன்னும் வரவில்லை.

விசாரணை அடிப்படையில், காவல்துறையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் இருளர் இன பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வந்த புகார் தொடர்பாக, நீதி விசாரணக்கு உத்தரவிடப்பட்டது. கோர்ட் பரிந்துரையின்பேரில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. எனினும், இரவு நேரத்தில் காவல்துறை வாகனத்தில் பெண்களை அழைத்து வந்த 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment