Wednesday, February 29, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது : கட்சிகள் மும்முரம்: சுயேச்சைகள் சுறுசுறுப்பு!

Wednesday,February,29,2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பிரசாரத்தில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று கடைசிநாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. பலமுனைப் போட்டி நிலவுவதால் மாநில அளவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன. நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திலும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். முத்துசெல்வி (அதிமுக), ஜவகர் சூரியகுமார் (திமுக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), முத்துக்குமார் (தேமுதிக), நாகேஸ்வரராவ் (சமாஜ்வாடி), ஜெயராஜ் (குடியரசு கட்சி), செண்பகவல்லி (புரட்சி பாரதம்) மற்றும் சுயேச்சைகள் பத்மராஜன், காந்தியவாதி ஆறுமுகம், சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன், தங்கராஜா ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். பா.ஜ. வேட்பாளர் முருகன், லோக்ஜனசக்தி வேட்பாளர் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்கின்றனர். மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை (மார்ச் 1ம் தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற 3ம் தேதி கடைசி நாள். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சங்கரன்கோவில் தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கைக்கு குறைவாகவே வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும், மனு பரிசீலனை, வாபசுக்கு பின்னர் மேலும் வேட்பாளர்கள் குறைய வாய்ப்பிருப்பதாலும் ஒரு ஓட்டுப் பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து நேற்று சங்கரன்கோவிலில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மார்ச் 1 முதல் 16ம் தேதி வரை மத்திய அமைச்சர் அழகிரி சங்கரன்கோவிலில் தங்கியிருந்து பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறார். மார்ச் 5, 6 தேதிகளில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மார்ச் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஸ்டாலின், மார்ச் 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ப¤ரசாரம் செய்கின்றனர். அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் 43 பேர் மூன்று யூனியன்களிலும் வலம் வந்த வண்ணம் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மார்ச் 14ம் தேதி பிரசாரம் செய்வார் என தெரிகிறது. மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மார்ச் 5ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறார். சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்வதில் சுறுசுறுப்பாக உள்ளன. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் நடக்கும் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment