Wednesday, February 29, 2012

மும்பை தாக்குதல் பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் அரசு பரபரப்பு பதில்!

Wednesday,February,29,2012
புதுடில்லி::இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான், கடந்த 2008ம் ஆண்டு, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது' என, சுப்ரீம் கோர்ட்டில், அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மும்பையில், கடந்த 2008 நவம்பரில், பாகிஸ்தானில் இருந்து வந்த பத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். கீழ் கோர்ட்டில், கசாபுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதை எதிர்த்து, கசாப் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடை விதித்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அப்தாப் ஆலம், சி.கே.பிரசாத் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பைத் தாக்குதல் சம்பவம், இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடத்தப்பட்டது. புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையிலும், சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம், இது தெரியவந்தது. பாகிஸ்தானை சேர்ந்த பத்து பயங்கரவாதிகள் தான், இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், இந்த தாக்குதலை நடத்தியதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம், இங்குள்ள சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு இடையே வன்முறையை ஏற்படுத்தும் நோக்கத்துடன், இந்த சதித் திட்டத்தை, பாக்., பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். இந்த பிரச்னைக்கு, சுப்ரீம் கோர்ட் தீர்வு காண வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே, இந்த தாக்குதலில் ஈடுபட்ட கசாபுக்கு, மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment