Wednesday, February 29, 2012

கொழும்பில் இந்து சமுத்திர கடற்படை மாநாடு ஆரம்பம்: 14 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

Wednesday,February,29,2012
இலங்கை::இந்து சமுத்திர கடற்படை மாநாடு கொழும்பு (Indian Ocean Naval Symposium) கலதாரி ஹோட்டலில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 60 ற்கும் மேற்பட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

செயற்பாட்டுத் திறன் தொடர்பாக தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டிணைப்பை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டை இலங்கை கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜயந்த பெரேரா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனேசியா, கென்யா, குவைட், ஓமான், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா, தான்ஸானிய்யா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்ற இந்த மாநாட்டின் போது கடற்படை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி பட்டறையும் இடம் பெறவுள்ளது.

பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கையை மையமாக கொண்டு 2008 ம் ஆண்டு இந்த சமுத்திர கடற்படை மாநாடு (யிலினிஷி) முதற்தடைவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடல் பாதுகாப்பு, ஸ்தீரம், கூட்டிணைப்பு போன்ற விடயங்களில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் ஊடாக பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

பிராந்திய நாடுகளின் கடற்படை தளபதிகள், உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமது அபிப்பிராயங்களையும், அனுபவங்களையும் முன்வைக்கவுள்ளனர்.

இந்து சமுத்திர பிராந்திய கடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் தொடர்பாக இம்முறை மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment