Tuesday, February 28, 2012

ரஷிய பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு: செசன்யா தீவிரவாதிகள் 2 பேர் கைது!

Tuesday, February 28, 2012
மாஸ்கோ::ரஷியாவில் வருகிற மார்ச் 4-ந் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் புதின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், பிரதமர் புதினை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொலை செய்ய நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக ரஷியாவின் சேனல் ஒன் தொலைக்காட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இந்த சதித்திட்டத்தில் ஈடுபட முயன்ற தீவிரவாதிகளில் 2 பேர் உக்ரைன் நாட்டில் உள்ள ஒடேசா பகுதியில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒருவர் பலியாகி விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

இதுகுறித்து, உக்ரைன் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி 4-ம்தேதியன்று ஒடேசா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகி விட்டார். காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு தீவிரவாதியை உக்ரைன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 4-ந் தேதியன்று அதே பகுதியில் வேறொரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த மற்றொரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 2 பேரிடமும், உக்ரைன் பாதுகாப்புப் படையினர் மற்றும் ரஷிய உளவுத் துறையினர் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு உள்ள தீவிரவாதிகள் 2 பேரும் ரஷியாவின் வடக்கு காகாஸஸ் பகுதியில் இஸ்லாமியர்களுக்கென்று தனியாக நாடு கேட்டு தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் செசன்யா நாட்டு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், புதினை கொலை செய்வதற்காக தீவிரவாதிகளை அனுப்பியது செசன்யா தீவிரவாதக் குழுவின் தலைவர் உமரோவ் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

விசாரணையில், தீவிரவாதிகள் 3 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி வழியாக உக்ரைனுக்கு ரெயிலில் வந்ததாகவும், அதிபருக்கான தேர்தல் நடைபெறும் தேதியில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் விளாடிமிர் புதினை கொலை செய்ய வேண்டும் என்று தங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்ததாகவும், தீவிரவாதிகள் கூறி உள்ளனர். உயிருடன் பிடிபட்டு உள்ள தீவிரவாதிகளில் ஒருவனான இலியா பியான்சின் கூறுகையில், மாஸ்கோவிற்கு சென்று ரஷிய பிரதமர் புதினை கொல்ல வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என்று தெரிவித்து உள்ளான்.

No comments:

Post a Comment