Thursday, December 1, 2011

இலங்கை கடற்படை பிடித்து சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு!

Thursday, December 01, 2011
மண்டபம் : இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28-ம் தேதி காலை 712 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. அன்றிரவு கச்சத்தீவு அருகே நூற்றுக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையை கண்டித்தும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறை பிடித்து சென்ற மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் கடந்த 2 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை காங்கேயன்துறை போலீசார் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி தேவதாஸ் கூறுகையில், ‘‘தமிழக மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டித்தக்கது. மீனவர்கள், படகை மீட்கவும், அவர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment