Friday, December 2, 2011

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்!

Friday, December 02, 2011
புதுடில்லி: "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமதித்த, அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.

வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த செப்டம்பரில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடு திரும்பியபோது, நியூயார்க்கில் உள்ள விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அமெரிக்க விமான போக்குவரத்து அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார். வெடிகுண்டு சோதனை நடத்துகிறோம் என கூறி, அவரது கோட்டையும், ஷுவையும் கழற்றும்படி கூறி சோதனை செய்தனர். இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில், அமெரிக்காவிடம் கவலை தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது. அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தலைவர் ஜான் பிஸ்டல், கலாமுக்கு எழுதிய கடிதத்தில், நடந்த அசம்பாவிதத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளுடன், இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதன் அடிப்படையில், அப்துல் கலாமை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இரு அதிகாரிகள், உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்துக்காக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

No comments:

Post a Comment