
இந்த வருடத்தினுள் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறும் அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது : 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தமக்குக் கிடைத்த ஒவ்வொரு ஜனநாயக சந்தர்ப்பத்திலும் தெளிவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களித்தனர்.
தமிழ் மக்கள் தமது சரியான அரசியல் தீர்வு அல்லாத எதற்கும் ஆதரவு வழங்கவில்லை. நாம் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை ஏற்று பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண திடசங்கற்பம் பூண்டுள்ளோம். அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைத்தால் நாம் ஆதரிக்க தயாராக உள்ளோம்.
ஐ. நா. செயலாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை நியமித்தார். அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்.
ஒரு இலட்சத்து 47 ஆயிரம் மக்களை காணவில்லை என மன்னார் ஆயர் கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அது குறித்து நாம் சபையில் கேள்வி எழுப்ப முடியும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அறிக்கை வழியமைக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் நாம் பேச்சு நடத்துவது குறித்து சர்வதேச சமூகத்துக்கு சொல்லிக் கொண்டிருக்காது எமது கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டில் அரசியல் தீர்வொன்றை முன்வையுங்கள்.
எமது உரிமைகளுக்காக தந்தை செல்வாவின் வழியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
No comments:
Post a Comment