Tuesday, November 29, 2011

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு தண்டனை குறைக்க வேண்டும்-தமிழக அரசு!

Tuesday, November 29, 2011
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 4 கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்துக்கிணங்க நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும் மற்றவர்களை பொறுத்தவரை அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் கவர்னருக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை முடிவை ஏற்று 2000-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்தார். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த 3 பேரும் ஜனாதிபதிக்கு அளித்த கருணை மனுக்களை தமிழக அரசு 2000-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதியிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மனுவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனையடுத்து தமிழக அரசின் மனு மீது விசாரணை, வரும் ஜனவரி மாதம் 31ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment