Friday, September 30, 2011

இலங்கை பல்லினங்களின் நாடாக மாறாதவரை அபிருத்தியையோ, சமூக நல்லுறவையோ ஏற்படுத்த முடியாது-பத்திரிகை அறிக்கை:பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்!

Friday, September 30, 2011
இன்று வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வில் நிகழும் சொல்லொனா வேதனைகள் சவால்கள் இழப்புக்கள் என்பவற்றை எதிர்கொள்வதற்குஸ என்ன வழி என்பது இன்று எம் முன்னுள்ள முக்கிய கேள்வியாகும்.

இன்று அனுபவிப்பது போன்ற துன்பங்களை விடவும் மோசமான துன்பங்;களை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.

பழைய யாழ் சந்தை, யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதிலிருந்து இன்றைய நில அபகரிப்பு மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத் தலையீடு, கிரீஸ் பூதம் வரையிலான பிரச்சினைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களும் நிலத்தின் மீதான அதிகாரங்களும், நீதித்துறை அதிகாரங்களும் கொண்ட அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு அவசியம். மாநில மட்டத்திலான அரச கட்டமைப்பிற்குள் இது அடங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட பொலிஸ் என்பது எப்போதும் பேரினவாத மேலாதிக்க மனோபாவத்துடனேயே நடந்து வந்திருக்கிறது.இதுவே பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகள் தலைதூக்குவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

திரும்பவும் மக்கள் மீதான ஆத்திரமூட்டல் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இத்தகைய போக்குகள் சமூகத்தை மேலும் மேலும் விரக்திக்கும், கோபத்திற்கு இட்டுச் செல்லவும் இதேபோல் வடக்கு கிழக்கில் நிலங்கள் அவற்றின் பயன்பாட்டு அதிகாரம் மாகாணத்துக்குரியதாக அமைய வேண்டும்.

தற்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணிப்பதிவுகள் மக்கள் மத்தியில் பல்வேறுவிதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இடம்பெயர்ந்து இலங்கையிலும் இந்தியாவிலும் அகதிகளாக வாழ்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான இயல்பு நிலை ஏற்படுத்தாத வரையில், அச்சநிலை முழுதாக நீங்காத நிலையில், அவசர அவசரமாக இத்தகைய காணிப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவது சொந்த ஊரிலேயே தம்மை சிறுபான்மையினராக ஆக்குவதற்காகவா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

சட்டம் ஒழுங்கு, காணி, நிதி,நீதி அதிகாரங்களை கொண்ட அதிகார கட்டமைப்பின் அவசியம் வடக்கு கிழக்கில் வரலாற்றின் தேவையாக அமைகிறது.

தவிர வடக்கின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கே சனத்தொகை கணக்கெடுப்பு உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 30 வருடங்களில் மக்கள் புலம் பெயர்ந்து போனது அவர்களில் பெருந்தொகையானோர் திரும்பிவராத சூழ்நிலையில் பிரதிநிதித்துவ குறைக்கப்பட்டுள்ளது. இன்னொரு விதமாக பார்ப்போமானால் ஒரு சமூகத்தின் பேரழிவு அந்த சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான நியாயமாக்கப்பட்டிருக்கிறது.

யுத்தம் முடிவிற்கு வந்து சமூகங்களிடையே புரிந்துணர்வு சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது அந்த அழிவுக்கு உட்பட்ட சமூகத்தை மீளெழுச்சி கொள்ள வைப்பதும், அச் சமூகத்திற்குள்ள சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்துவதும் ஆகும்.

ஐ.நா சபைக்கும் அண்டை நாட்டுக்கும் அரசாங்கம் மீள் குடியேற்றம் சமூகங்களிடையே புரிந்துணர்வு அபிவிருத்திப்பற்றி கூறி வருகின்றது.

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்புக்களும் இராணுவமயமாக்கலும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவ குறைப்பும், கிரீஸ் பூதங்களும், காணிப்பதிவுகளும் சமூகங்களிடையே புரிந்துணர்வுக்கு மாறாக பேரினவாத அகந்தையை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றன. உண்மைகள் துருத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உலகளவிலும், பிராந்தியளவிலும் பேசப்படுகிறது. நிலம்,பொலிஸ், நிதி, நீதி அதிகாரங்களை வென்றெடுப்பதிலேயே தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த முடியும். சிங்கள தலைவர்களுடன் மாத்திரமல்லாமல் முஸ்லீம், மலையக தலைவர்களுடனும் இவைபற்றி பேசப்பட வேண்டும்.

பல்லினங்களின் நாடாக இலங்கை மாற்றப்படுவதிலேயே உண்மையான புரிந்துணர்வு. சமூக, பொருளாதார அபிவிருத்தியும் ஏற்பட முடியும்

தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

No comments:

Post a Comment