Thursday, August 18, 2011

புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்தி கடிதங்களை அனுப்பி மக்களை அச்சுறுத்துகின்றனர்- சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர!

Thursday, August 18, 2011
புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்தி கடிதங்களை அனுப்பி மக்களை அச்சுறுத்துகின்றனர் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

மர்ம மனிதன் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் நேற்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், களவெடுப்பவர்கள்,கொள்ளைக்காரர்கள்,கள்ள வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்,மரம் வெட்டி கடத்துபவர்கள்,இன்னுமொரு வீட்டுக்குள் களவாகச்செல்ல நினைப்பவர்களே இந்த கிரீஸ் பேய் கதையை கிளப்பிவிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதேச மக்கள் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்:-

இந்த நாட்டில் எழுந்துள்ள தப்பான அபிப்பிராயம் தொடர்பில் எழும்பியுள்ள பீதியினையடுத்து கொழும்பில் இது தொடர்பில் நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம். இவைகள் எல்லாம் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் நிகழ்கின்றது.

மனிதர்களின் பெறுமதியை நாங்கள் அளவிட்டு கூறமுடியாது. முதலில் நாங்கள் மனிதர்கள். அதன் பிறகு நாங்கள் இலங்கையர்கள். நாங்கள் எந்த மதம், எந்த இனம் என்பது தொடர்பில் நாங்கள் பெற்றோர்களாலேயே பிரிக்கப்படுகின்றோம்.

இதனை ஒரு காலத்தில் விளங்கிக் கொள்ளமுடியாத நிலையிலேயே நாங்கள் பல அழிவுகளை சந்தித்தோம்.கடந்த 30 வருடகாலத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள்ளேயே அடித்துக்கொலை செய்து கொண்டோம். அவர்களும் எமது மக்களே. அவர்களிலும் பல கல்விமான்கள், புத்திஜீவிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் இருந்திருக்கலாம்.

கொல்லப்பட்டவர்களில் எந்த இனமாக இருந்தாலும் அந்த குடும்பத்தினர் இன்னும் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பர். கணவரை இழந்த மனைவி மனைவியை இழந்த கணவர் அவர்களின் பிள்ளைகள் இரத்தையும் குண்டுத் தாக்குதல்களையும் கண்டு எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பார்கள்.

பேச்சுவார்த்தை என்ற ரீதியில் புலிகள் படுகொலை செய்தனர்.ஆயுதங்களை கொள்வனவு செய்தனர். கப்பம்பெற்றனர். அவற்றினை சுவிஸ் வங்கிகளில் வைப்பிலிட்டனர்.

இந்த நாட்டில் தமிழ் பயங்கரவாதம் மட்டும் இருக்கவில்லை. சிங்கள பயங்கரவாதம் ஜே.வி.பி.என்ற பெயரில் உருவானது. மக்களை பாதுகாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அவற்றை அழித்தோம். அதனைத் தொடர்ந்து தமிழ் பயங்கரவாதம் உருவானது. சிங்கள பயங்கரவாதத்தை எவ்வாறு அழித்தோமோ அதேபோன்றே மக்களை பாதுகாக்க தமிழ் பயங்கரவாதத்தையும் அழித்தோம்.

சிங்கள பயங்கரவாதிகள் இருந்ததால் அனைத்து சிங்களவர்களையும் பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது. அதேபோன்று தமிழ் பயங்கரவாதம் இருந்ததால் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது.அப்படி யாராவது கூறினால் அவர்கள் மனித நேயம் அற்றவர்களாகவே கருதப்படவேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் சாதிக்கமுடியாததை. மாவிலாறை மூடி மக்களின் வாழ்வாதாரத்தை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். அங்கு தமிழர்கள் இருக்கவில்லையா? மக்களின் வாக்குகளைப் பெற்ற ஒரு நாட்டின் தலைவரால் அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனையே எமது ஜனாதிபதியும் செய்தார்.

கடந்த காலங்களில் கொழும்பு,கண்டி,நுவரேலியா உட்பட பல பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்லமுடியாத நிலையிருந்தது அந்த நிலைமை இன்று மாற்றப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளினால் வடகிழக்கு பாதிக்கப்பட்டதுடன் அது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. பயங்கரவாதிகளினால் இந்த நாட்டின் தமிழ் - சிங்கள தலைவர்கள், புத்திஜீவகள் கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்றது உங்களின் பிள்ளைகள். 1991ஆம் ஆண்டு 700 பொலிஸாரைக் கொண்டு சென்றனர்.ஆனால் அந்தவேளையில் சிங்கள மக்கள் எதுவும் செய்யவில்லை.அமைதியாகவே இருந்தனர்.

தமிழர்கள் சிங்களவர்கள் எல்லாம் மனிதர்கள், இன்று வடகிழக்கை பாருங்கள். இன்றைய நிலையைப்பாருங்கள்.அன்று முன்னைய நிலையில் பயங்கரவாதிகளாக இருந்தவர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்கின்றார், ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றார்.பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் மனிதர்களாக மாறியபோது நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டோம். அவர்களது பிழைகளை மன்னித்தோம். மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு வாக்களித்தனர்.

நாங்கள் எங்களது பிழைகளை திருத்தி சமூகத்துக்குள் வரவேண்டும். இந்த நாட்டின் பெரிய சக்தி மக்கள் சக்தி. பெரிய சொத்து மக்கள் சொத்து.

இந்த நாட்டில் கொடிய யுத்தத்தையே நாங்கள் வெற்றி கொண்டுள்ளோம். இந்தப் பெரிய யுத்தத்தை வெற்றி கொண்ட நாங்கள் இந்த பூச்சாண்டிகளுக்கு பயப்படுவதா? வேறு நாட்டில் இருந்து கொண்டு சேறு பூசுகின்றனர்.யாருக்கு வசைபாடுகின்றனர் அவர்கள்,அவர்கள் இலங்கைக்கே சேறு பூசுகின்றனர்.

புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்தி கடிதங்களை அனுப்பி மக்களை அச்சுறுத்துகின்றனர். களவெடுத்த பணங்களையும் புலிகள் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ள பணத்தைக்கொண்டு சுகபோகங்களை அனுபவித்துவரும் இவர்கள்,ஒரு நாட்டைச்செய்ய முனைகின்றனர்.

சில நாடுகள் எங்களை வசைபாடிக்கொண்டு குற்றஞ் சொல்லிக்கொண்டு இருக்கும் அதேவேளையில் சில நாடுகள் எங்களுக்கு துணை நிற்கின்றது.ஜனாதிபதி சீனாவுக்கு சென்றபோது சர்வதேச ரீதீயில் இருந்துவரும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் தாங்கள் பொறுப்பேற்று முறியடிப்பதாக சீன ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று இந்திய மத்திய அரசாங்கம் சார்க் பிரதேசத்தில் சகோதர நாடு. உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள உதவிவருகின்றது.

கொடிய இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாங்கள் இந்த பேயை கணக்கெடுப்போமா? பொய்பிரசாரங்களை பொதுமக்கள் கணக்கெடுப்பார்களா? இதனை யார் கண்டார்கள், ஹகவத்தையில் இடம்பெற்ற சம்பவம் இதேபோன்று தான்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இதனை தெளிவாக தெரிவிக்குமாறு தெரிவித்தேன் அவர்களும் தெளிவாக கூறினர். உண்மை மக்களுக்கு சென்றது. பத்திரிகைகள் பத்திரிகைகளை விற்பதற்காக செய்தி வெளியிடாமல் பொது நோக்கோடு செயற்படுமாறு கேட்டேன்.

களவெடுப்பவர்கள், கொள்ளைக்காரர்கள், கள்ள வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மரம் வெட்டி கடத்துபவர்கள், இன்னுமொரு வீட்டுக்குள் களவாகச்செல்ல நினைப்பவர்களே இந்த கிரீஸ் பேய் கதையை கிளப்பிவிட்டுள்ளனர்.

இதபோன்று தனிப்பட்ட கோபதாபங்கள் உள்ளவர்கள் தங்களது காரியத்தை செய்வதற்கும் காணிப் பிரச்சினை உள்ளவர்கள் தங்களது காணியை கைப்பற்றுவதற்கும் இவ்வாறான வதந்தியை கிளப்புகின்றனர். மக்களை குழப்புகின்றனர்.

இவ்வாறு வதந்திகளை பரப்பி மக்களை குழப்ப முனைந்த 47 பேரை இதுவரையில் கைதுசெய்துள்ளோம். விளக்கமறியலில் வைத்துள்ளோம். எங்களை நம்புங்கள். ஒரு பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் இருக்கும் போதுதான் அங்கு சிவில் நிர்வாகம் இருப்பதாக கருதமுடியும். பொலிஸார் உங்களுக்காகவே சேவை செய்ய காத்திருக்கின்றனர் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயகுணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கரவிட்டகே ரவீந்திர உட்பட பிரதேச செயலாளர்கள்,மதத் தலைர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment