Saturday, August 20, 2011

ரஷ்ய ஹெலி கொள்வனவு இன்னமும் இடம்பெறவில்லை பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக விமானப் படைத்தளபதி- ஹர்ச அபேயவிக்ரம!

Saturday, August 20, 2011
ரஷ்யாவிடமிருந்து எம்.ஐ,.171 ரக ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யும் விடயம் இன்னும் பேச்சு மட்டத்தில் தான் இருக்கிறதே தவிர உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே எயார் மார்ஷல் அபேயவிக்ரம இந்த தகவலை வெளியிட்டார்.

யுத்தத்தில் வெற்றியடைந்த 2 வருடங்களின் பின்னர் 14 ரஷ்ய இராணுவ எம்.ஐ.171 ரக ஹெலிகொப்டர்களை இலங்கை பெற்றிருப்பதாகவும் இது தொடர்பான உடன்படிக்கை இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராணுவத் தளபதி;

இதில் தவறும் இல்லை,இது புதுமைக்குரிய விடயமும் இல்லை.இந்த ரக ஹெலிகொப்டர்கள்
ஏற்கனவே எம்மிடம் 18 இருக்கிறது.அவற்றில் சிலவற்றில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.நாம் எமது விமான போக்குவரத்துகளை அதிகரிக்க வேண்டியிருக்கிறது.எதிர்காலத் தில் இலங்கை விமான சேவைகள் மையமாகக்கூடும்.அதில் உள்நாட்டு விமான சேவைகள் பொறுப்பு எமக்குரியது.
அது மட்டுமல்லாது எதிர்காலத்தில் நாடு அதிக கடல் வணிகம் செய்யவிருப்பதால் அதற்கும் எமக்கு ஹெலிகொப்டர்கள் அவசியம்.

எனினும் மேற்படி ஹெலிகொப்டர் கொள்வனவு விடயமானது இன்னும் பேச்சு மட்டத்தில் இருக்கிறதே தவிர அங்கு உடன்படிக்கை எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை.எமக்கு தேவையான பொருட்கள் என்னவென்பது முடிவு செய்யப்பட்டு அதன் பின்னர் கொள்வனவு செய்வது பற்றி பேச்சுகள் நடைபெற்று முடிந்ததன் பின்னரே அதற்கான பெறுமதி என்னவென்று தெரியவரும்.எமது பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ற இடங்களே தெரிவு செய்யப்படும்.

இதேநேரம்,வான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படை எப்போதும் விழிப்பாக இருக்கிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment