Friday, August 19, 2011

உலக மக்கள் தொகை 700 கோடியை தொடும்!

Friday, August 19, 2011
இந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என பிரான்சின் தேசிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தின் (ஐஎன்இடி) ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதன் விவரம்: 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலக மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் 700 கோடியைத் தொடும். 2024ம் ஆண்டில் 800 கோடியை தொடும். 21ம் நூற்றாண்டின் இறுதியில் இது 900 கோடி முதல் 1000 கோடியை எட்டும். ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி ஆகியவை ஏற்கனவே நடத்திய ஆய்வை ஒட்டியே இதுவும் அமைந்துள்ளது. உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய 7 நாடுகளில் உள்ளனர். சீனா 133 கோடி பேருடன் முதலிடத்திலும், இந்தியா 121 கோடியுடன் 2ம் இடத்திலும் உள்ளது.

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் நடைமுறையில் இருப்பதால், மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து உள்ளது. இதனால் 2050ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்துவிடும். உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்தாலும் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த இது இப்போது 1.1 சதவீதமாக சரிந்துள்ளது. இப்போது ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக 2.5 குழந்தை பெற்றுக் கொள்கிறார்.

No comments:

Post a Comment