Friday, August 19, 2011

ஏறாவூர் நகர சபையில் சனல் 4 அலைவரிசைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்

Friday, August 19, 2011
லண்டன் சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை அரசு யுத்தக் குற்றமிழைத்ததாகக் கூறப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வரும் காணொலி நிகழ்ச்சி வேண்டுமென்றே புனையப்பட்டது என்றும் அது, நாட்டின் இறைமையைப் பாதிக்கக் கூடிய வகையிலும் தற்போது நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையில் நிலவும் சகவாழ்வைச் சீர்குலைக்கும் விதத்திலும் அமைந்துள்ளது எனக்கூறி அதற்கு எதிரான கண்டனத் தீர்மானமொன்று ஏறாவூர் நகரசபையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் உள்ள உள்ளூராட்சி நகர சபையொன்றில் சனல் 4 காணொளிக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

கண்டனத் தீர்மானத்தின்மீது உரையாற்றிய ஏறாவூர் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா அவர்கள்,

எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் அது ஜனநாயக அடிப்படையிலே பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும். அழிவுகளை ஏற்படுத்தி மனித உரிமைகளைப் பறிக்கும் ஒரு முயற்சியாக அது ஒருபோதும் இருக்க முடியாது. துரதிருஷ்ட வசமாக சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களை பூதாகாரப் படுத்தி ஆயுதப் போராட்டமாக மாற்றியது அரசியல் வாதிகளும் ஊடகங்களும்தான். பிற்காலத்தில் அழிவுகள் ஏற்படுவதற்கு இவ்வாறான ஊடகப் போக்குகளும்தான் காரணாக அமைந்து விட்டது.

ஜனநாயக ரீதியான தார்மீகப் பொறுப்பை மறந்து உண்மைக்குப் புறம்பாக திரிபு படுத்தி விட்டார்கள். இந்த நாட்டின் அழிவுகளும் இப்படித்தான் நடந்தது. இளைஞர்களையும் பலி கொடுத்து நாட்டிற்கு அழிவுகளையும் ஏற்படுத்தி கடைசியில் எதுவிதமான நன்மைகளும் கிட்டவில்லை. ஒன்றையும் அடையமுடியவில்லை. எமது பகுதிகளில் இன அழிப்புக்களும் படுகொலைகளும் இடம்பெற்றன.

ஆயுதம் தாங்காத அப்பாவிகள் தாக்கப்பட்டவரலாறுக்கு நாங்கள் இன்னமும் உயிர்வாழும் சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றோம். எமது ஊர் தாக்கப்பட்டது. ஒரே இரவிலே நூற்றி நாற்பத்தெட்டுப்பேர் எல்ரீரீஈ இனரால் படுகொலை செய்யப்பட்டார்கள். பக்கத்திலுள்ள காத்தான்குடியில் பள்ளிவாசலிலே தொழுது கொண்டு நின்றவர்களைப் படுகொலை செய்தார்கள். கிராமம் கிராமமாக அழித்தார்கள். அப்படியிருந்தும் நாங்கள் சகவாழ்வுதான் முக்கியம் என்பதால் அழிவுகளைச் செய்தவர்களையும் செய்வித்தவர்களையும் சகித்துக் கொண்டும் நேசக்கரம் நீட்டியும் வாழ்கின்றோம்.

இந்த விஷயத்திலே மனிதாபிமானமாக மிகுந்த நிதானப்போக்கைக் கடைப்பிடித்து மன்னிக்கும் தன்மையுடன் தொடர்ந்தும் இந்தப் பகுதியிலே சமாதானமாக சக வாழ்வு வாழ வேண்டுமென்பதற்காக அநியாயமான முறையிலே மக்கள் பாதிக்கப் படுகின்ற நேரத்திலெல்லாம் நாங்கள் குரல் கொடுத்தோம். எத்தனையோ விட்டுக் கொடுப்புக்கள் தியாகங்களைச் செய்தோம். எப்படியென்றால், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்க் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு அழிவை எதிர்நோக்கிய போது சகோதரப் படுகொலைகள் இடம் பெறாமல் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நாங்கள் கழுத்துக் கொடுத்தோம். குறிப்பாக நான் அந்த மோதலைத் தவிர்ப்பதற்குப் பாடுபட்டேன். இதை முழு உலகமும் நன்கு அறியும். படு கொலைகளைத் தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அழிவுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பதற்கு நாங்கள் உயிர்த் தியாகங்கள் செய்தோம்.

அழிவுகளை நாங்கள் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. மக்களை மீட்டெடுக்கின்ற நடவடிக்கைதான் இறுதிக்கட்ட யுத்தம். எல்ரீரீஈ இனர் கடைசிக் கட்டத்திலே மக்களைக் கவசமாகப் பாவித்து தங்களைக் காத்துக்கொள்ள முயற்சித்தார்கள். மக்களை மீட்கும் இந்த மனிதாபிமான நடவடிக்கையிலே ஒரு அப்பாவிக் குடிமகனும் வேண்டுமென்று படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சாகடிக்கப் படக்கூடாது என்பதிலே ஜனாதிபதியவர்கள் மிகக்கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்கள். மக்களை மீட்பதற்கு இன்னமும் ஏன் தாமதம் என்று உலகின் பல மட்டங்களிலிருந்து கேள்விகள் வந்தபோதும் மக்களுக்கு எதுவித பாதிப்புக்களும் இல்லாமல் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் படையினர் அங்குலம் அங்குலமாக நகர வேண்டியிருந்தது.

தாங்கள் தப்பிக்கவே முடியாது என்ற நிலை வரும்போது சயனைட் வில்லைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்பது எல்ரீரீஈ இயக்கத் தலைவரின் அறுதியும் இறுதியுமான உத்தரவு. அப்படி மற்றவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த அந்தத் தலைவரும் அவரது தளபதிகளும் தங்கள் உயிர் பறிக்கப் பட்டுவிடக் கூடாதென்பதற்காக தாங்கள் பணயம் வைத்திருந்த பொதுமக்களைக் கொன்று குவித்து அதனை தங்களுக்கு ஆதரவு வழங்கும் வெளியுலகத்தாருக்குக் காண்பித்து தாங்கள் மட்டும் தப்பித்துக் கொள்ள நினைத்தார்கள்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது நான் அமெரிக்க வொஷிங்டன் மாநிலத்திலுள்ள தூதுவராலயத்தில் ராஜதந்திரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். உலகின் தகவல்மையமும் அரசியல்மையமும் அங்குதான் இருக்கிறது.

கடைசி நேரப் போராட்டங்களைத் திரிபுபடுத்தி சனல் 4 என்பது முற்றுமுழுவதுமாக புனையப்பட்ட விடங்களைத் தொகுத்து ஒளிபரப்பி வருகிறது என்பதை நாங்கள் மாத்திரமல்ல இந்த விடயத்திலே நிபுணத்துவம் உள்ளவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

சனல்4 வெளியிட்டுள்ள புரளி எமது இறைமையைப் பாதித்து இன ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்கும் குந்தகம் ஏற்படுத்துவதாகும்.

இப்பொழுது எமது நாட்டிலே என்றுமில்லாத அபிவிருத்தி இடம்பெறுகிறது. இப்பொழுது எந்தப் பயங்கரவாதமும் இல்லை. கடைசியாக அவர்கள் மீலாத் விழாவிலேதான் குண்டு வைத்தார்கள். அதில் பாதிக்கப்பட்ட, அமைச்சராக இருந்த மஹிந்த விஜேசேகர இன்னமும் கோமா நிலையில் உள்ளார். இதனால் எல்லோருக்கும் தலைக்குனிவுதான். எல்லோருக்கும் அதிகாரப்பரவலாக்கம் கிடைத்து அர்த்தமுள்ள தீர்வு கிடைக்கவேண்டும். சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வு வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஏறாவூர் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம் பெற்ற இந்தக் கண்டனத் தீர்மானம் எடுக்கும் அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சுயேச்சைக்குழு உறுப்பினரான தமிழ்ப் பிரதிநிதி ஆகியோரின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment