Friday, August 19, 2011

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து கலாச்சார மையத்தில் தற்கொலை தாக்குதல்; 10 பேர் பலி!

Friday, August 19, 2011
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இங்கிலாந்து கலாச்சார மையம் உள்ளது. அதன் அருகே துணை அதிபர் மொகமத் காசிம் பாகிமூன் மாளிகை மற்றும் வெளிநாட்டினர் தங்கும் இன்டர்கான்டினென்டல் என்ற நட்சத்திர ஓட்டலும் உள்ளது.

இங்கிலாந்து கலாச்சார மைய வளாகத்திற்குள் இன்று காலை 5.45 மணிக்கு தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் புகுந்தனர். அங்கு 2 தடவை தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.உடனே, ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர்.

இதை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. தற்கொலை தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், சில கார்கள் சுக்கு நூறாக நொறுங்கின.

இச்சம்பவத்தில் 10 பேர் உயிர் இழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.இந்த தகவலை குற்றவியல் புலனாய்வுத்துறை தலைவர் மொகமத் ஷாகிர் தெரிவித்தார். கலாச்சார மையத்துக்குள் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கிறது. எனவே, சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment