Tuesday, November 27, 2012

ராஜிவ் கொலை கைதிக்கு பரோல்!

Tuesday, November 27, 2012
மதுரை::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் இருந்த கைதி ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். சொத்து பிரச்னைக்காக, ரவிச்சந்திரனை, பரோவில் விடுவிக்க, ஐகோர்ட் கிளையில் அவரது தாயார் ராஜேஸ்வரி மனு செய்திருந்தார். அதை ஏற்று, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது; அதன் நிர்வாகிகளிடம் பேசக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன், நவ.,26 முதல் டிச., 10 வரை ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அவர் சிறையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலங்கை அருகே கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!

Tuesday, November 27, 2012
சென்னை::சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட தகவல் வருமாறு:-
வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலமான கடல் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 மணி முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்று கன்னியாகுமரி பகுதியில் சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. சின்னமுட்டம் துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. காலை 7 மணி முதலே அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
சூறாவளி மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதையடுத்து சுற்றுலாபயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 
1-11-12_findyour_INNER_468x60.gif

புலிகளின் மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்!

Tuesday, November 27, 2012
இலங்கை::புலிகளின் மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

அந்த துண்டுப்பிரசுரங்களை அக்கரைப்பற்று பிரதேசத்தில விநியோகிப்பதற்காக முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்றதாகக் கூறப்படும் ஐந்து பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துண்டுப்பிரசுரங்களையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் இந்த 5 சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்தாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு!

Tuesday, November 27, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள குற்றத்தடுப்புப் பிரிவு முதலாம் மாடிக்கு சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளை எதிர்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போது உரிய இடத்திற்கு சென்றுள்ளார்.

இதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ப.திகாம்பரத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்து அவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் உள்ள நபரொருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் திகாம்பரத்திற்கு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது.

வர்த்தகரான பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் முன்னர் தற்போதைய மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாருடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது நிதி விடயங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் தங்களிடம் இருந்து 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாகவும் வங்கி விசாரணைகளில் இது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தனது மோசடியை ஒப்புக் கொண்டு அதனை திருப்பிச் செலுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் அத அதரணவிடம் தெரிவித்தார்.

எனினும் பணமோசடி செய்த குறித்த நபர் வீட்டை பிடுங்க முயற்சிப்பதாக தன்மீது தற்போது முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது குறித்து தனக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விசாரணை அழைப்பை ஏற்று அதனை எதிர்கொண்டதாகவும் குறித்த நபருக்கு 5 கோடி ரூபா பணம் வந்தது எப்படி என விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியதாகவும் திகாம்பரம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பெயரைக்கூறி அதிகார மோசடியில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்!

Tuesday, November 27, 2012
இலங்கை::புலிகளுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புலிகளுக்கு ஆதவரான கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சுவரொட்டிகள் மற்றும் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரச்சாரம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அனுப்பி வைக்க்பபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தில் சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை!

Tuesday, November 27, 2012
இலங்கை::பாரதூரமான செயல்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைப்பதற்காக மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சிறைச்சாலையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துடன் வவுணதீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.வித்தானகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொறியியலாளர்கள் வவுணதீவு பிரதேசத்தில் முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.