Thursday, July 11, 2019

வைகோவுக்கு எதிராக துணை ஜனாதிபதியிடம் புகார்!

மாநிலங்களவை உறுப்பினராக வைகோவை பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்த வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனுதாக்கல் செய்தார். வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு வைகோ மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
ஆனால் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தற்போது இருக்கும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, வைகோவுக்கு எதிராக வெங்கைய்யா நாயுடுவிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதுதொடர்பாக வைகோவுக்கு இன்னொரு செக்! என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
 
இந்த நிலையில் சசிகலா புஷ்பா குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடுவுக்கு இன்று (ஜூலை 11) கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், “தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற "நான் குற்றம்சாட்டுகிறேன்" நூல் வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக வைகோ மீது ஐபிசி 124(ஏ) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனை வழங்கி எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை என்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யாது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்தான் ஒருவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யமுடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
இருந்தாலும் ஜனநாயகத்தின் கோயில் போன்ற இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள சசிகலா புஷ்பா,
“வைகோ தொடர்ந்து தேசத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக பலமுறை முழக்கங்கள் எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் தொடர்ந்து அவர் குற்றம்சாட்டிவருகிறார். இதன்மூலம் தமிழக மக்களை தவறாக வழிநடத்துகிறார். மேலும், நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, என்ன தண்டனை வழங்கினாலும் எதிர்காலத்திலும் அதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்வேன் என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளேன்” என்றும் கூறியிருக்கிறார்.
 
மேலும், “இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கும் பிரதமருக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் தக்க பாடம் புகட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் சசிகலா புஷ்பா.

No comments:

Post a Comment