Wednesday, June 12, 2019

முஸ்லிம் தலைவர்கள் “இரு முகம் காட்டுகிறார்கள்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!

சிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, இன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று இலங்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஏனைய சமூகங்களுக்கிடையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குருணாகல்
வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்களும் இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
 
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச தலைவர்களும், முஸ்லிம் பிரதிநிதிகளும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இன்று இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளும் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடையவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டுவந்தவுடன், அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துக் கொண்டுள்ளார்கள். இது நாடாளுமன்ற சம்பிரதாயம் அல்ல.
முஸ்லிம் பிரதிநிதிகள் சிங்களத்தில் ஐக்கியம் தொடர்பில் பேசி விட்டு தமிழில் இனவாத பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள் என்று பாரிய குற்றச்சாட்டொன்று காணப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், முஸ்லிம் பிரதிநிதிகளை பயன்படுத்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
 
இன்று மத்திய வங்கிப் பினை முறி விவகாரம், கடன் சுமை தொடர்பிலெல்லாம் எவரும் கதைப்பதில்லை. குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில நாட்கள் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை.அடிப்படைவாதிகள் கைது செய்யப்படுவதில்லை. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இவைதான் இன்று இடம்பெறும் விளையாட்டுக்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை மத்தியஸ்த முஸ்லிம்களது மட்டுமன்றி, அடிப்படைவாத முஸ்லிம்களின் வாக்குகளும் அவசியமாக இருக்கிறது.
 
தீவிரவாதத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவதில்லை. இதனை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் உருவாகியுள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில், முஸ்லிம் மக்களின் வீடுகள், பள்ளிவாசல்களில் சோதனைகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.
நான் தலைமையேற்கும் அரசாங்கத்தில் எந்தவொரு தீவிரவாதத்துக்கும்; இடமில்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்.

No comments:

Post a Comment