Friday, June 7, 2019

இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தை மதிக்கும் அமெரிக்கா: கிளார்க் கூப்பர்!

இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தை தாங்கள் மதிப்பதுடன், தங்களது இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்வதற்கும் எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஆர். கிளார்க் கூப்பர் கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அமெரிக்க நிதியுதவியின் கீழான கண்ணிவெடி அகற்றல் திட்டங்களை மதிப்பீடு செய்யும் நோக்கில் அவரின் இலங்கை விஜயம் அமைந்திருந்ததாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கண்ணிவெடி அகற்றல் முயற்சிகளின் நிமித்தம் 2018 ஆம் நிதியாண்டில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் சுமார் 970 மில்லியன் ரூபா உதவியாக வழங்கப்பட்டுள்ளது.இதனூடாக 2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடி தாக்கமற்ற நாடாக உருவாகும் இலங்கையின் இலக்கை அடைவதில் இலங்கையுடன் பங்காண்மையுடன் செயற்படுவதில் அமெரிக்கா பெருமையடைகிறது.

கண்ணிவெடி அகற்றலானது அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்புக்கு அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு பங்காண்மை எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பதன் ஒரு அம்சம் மட்டுமே என்று உதவிச் செயலாளர் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கு இறையாண்மையுடைய நாடுகள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்து-பசுபிக் உபாயம் கோடிட்டுக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment