Wednesday, May 22, 2019

நாங்கள் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில்லை: பிரிகேடியர் சாந்த ஹேரத்! Photos

யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார்
 
கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்யுத்த காலத்தில் அதிகளவிலான முஸ்லிம்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. இராணுவத்தில் கூடுதலான முஸ்லிம் சகோதரர்கள் இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள். என்னுடைய தகுதியை ஒத்த சகோதரர் ஜமால்தீன் என்பவர் இருந்தார். அவர் புலிகளின் தாக்கதல் காரணமாக உயிரிழந்து விட்டார். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். முஸ்லிம் சகோதரர்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றினார்கள். எங்களுக்கிடையே எந்தவிதமான வேறுபாடும் இருக்க வில்லை. அதேபோன்று தமிழ் மக்களுக்கிடையே எந்தவிதமான வேறுபாடு இருக்க வில்லை. எங்களுடைய கடமையைச் செய்யும் போது எல்லோரையும் ஒரு சாதாரண அப்பாவி மனிதர்களாகவே நாங்கள் பார்ப்போம். படைவீரர்கள் உட்பட எல்லோரும் தாய் நாட்டை சேர்ந்தவர்கள்.
 
நாங்கள் எல்லோருடனும் நேசம் வைத்துள்ளோம். நாங்கள் இராணுவ சீருடை அணிந்தாலும் சிங்களவர்கள் என்று பார்ப்பதில்லை. நாங்கள் எல்லோரும் மனிதர்கள். மாவில்லாறு யுத்ததின் போது இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இருந்தார்கள். அதில் ஒரு இலட்சம் மக்கள் எங்கள் பக்கம் வந்தார்கள். அந்த மக்களை இல்லாமற் செய்தது நாங்கள் அல்ல. 7 கிலோ மீட்டர் அளவில் நெருங்கி விட்டோம். அவர்களுக்கு எங்களால் எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. அந்த இடத்துக்கு எங்களுக்குச் செல்ல முடியாது. அந்த சனங்கள் பலத்த காயங்களுடன் எங்களை நோக்கி வந்தார்கள். அவர்கள் வரும் போது எங்களுடைய கண்களில் இருந்த கண்ணீர் வடிந்தது. அவர்கள் வரவிட வில்லை. அவர்களை புலிகளே சுட்டார்கள். ஆனால் அவர்கள் இதனை திரிவுபடுத்தினார்கள். அப்பொழுது எங்களுடைய ஊடகம் மந்தகதியில் இருந்தது.

நான் 1991, 1992 காலப் பகுதியில் வடக்கு மன்னார், கல்முனை உட்பட கிழக்குப் பகுதியில் கடமையாற்றியிருக்கின்றேன். அப்பொழுது அவர்கள் புலிகளுடைய நெருக்குவாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். கடைகள் மூடப்பட்டிருந்தது. வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியாது. இப்படி பல சொல்லொண்ணாத் துயரங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மக்களை நாங்கள் இன்று சந்தோசமாக வாழ வைத்துள்ளோம். இராணுவத்தினர் என்போர் சந்தோசமாக வாழ வைப்பவர்கள் ஆவர். காலி முகத்திடலில் மிகவும் சந்தோசமாக இருப்பவர்கள் முஸ்லிம்களாவர். இதை நாம் அறிவோம். எனினும் துரதிஸ்டவசமாக மீண்டும் குண்டுகள் வெடிக்குமளவுக்கு முகம் கொடுத்துள்ளோம். இது பற்றி நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.

நாங்கள் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில்லை. என்ன நடந்துள்ளது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு முஸ்லிம்கள் யாவரும் சம்மந்தம் இல்லை என அறிந்து வைத்துள்ளனர்.
அடிப்படைவாதிகளை பற்றி எங்களால் அறிந்து கொள்ள முடியாது. அவ்வாறு இருப்பார்களாயின் எங்களுக்கு அறியத் தாருங்கள் என்று கூறியுள்ளோம். சிங்கள மக்கள் ஒரு போதும் அடுத்தவரை உயிரை மாய்த்து சந்தோசப்படும் மனிதர்கள் அல்லர். அப்படி செய்வார்களாயின் கடந்த காலங்களில் அதானித்திருக்க முடியும். அவ்வாறு அவர்கள் செய்ய வில்லை. பௌத்த சமயம் சிறந்த ஒழுங்கை காட்டியுள்ளது. பழிக்குப் பழி தீர்க்கின்ற சமூகமல்ல எங்கள் சமூகம். பேருவளை, திகன, உள்ளிட்ட பல இடங்களைப் பார்க்கலாம். போட்டித் தன்மை இருக்கிறது. அந்த போட்டித் தன்மை எவை என்று பார்த்து அதன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டி இருக்கிறது. ஏன் நாங்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க முடியாது. கடந்த தீவிர வாதத் தாக்குதல் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் பஸ்லுர் ரஹ்மான் , கண்டி மாநகர சபை உறுப்பினர் மாத்தலி மரைக்கார், பள்ளேகலை இராணுவ முகாமிலுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment