இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் உள்ளனர்.
இதேநேரம், மேலும் ஒரு தரப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ளனர்.
இதேவேளை, மாளிகாவத்தை - ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 58 வாள்களும், துப்பாக்கி ஒன்றும் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேநேரம், குற்றப் புலனாய்வு பிரிவினரும், கடற்படையினரும் இணைந்து களனி கங்கையின் மல்வானை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள் உட்பட சில கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அவசர நிலைமைகள் அல்லது சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்குவதற்கு புதிய அழைப்பு இலக்கம் ஒன்றை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 113 என்ற அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தமது தலைமையத்திற்கு தகவல் வழங்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment