உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பை மிகவும் சிறப்பான முறையில் உறுதிப்படுத்துவதற்குத் தாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி பாதுகாப்புச் செயலாளரும், முப்படைத் தளபதிகளும், பதில் பொலிஸ் மா அதிபரும் விபரித்துள்ளனர்.
முப்படைகளையும் பொலிசாரையும் ஒருங்கிணைத்து தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் ஊடாக பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்தார்.
இதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்ட சகலருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் செனநாயக்க குறிப்பிட்டார். பாடசாலைகளில் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் பியல் டீ சில்வா கருத்து வெளியிடுகையில், நாட்டில் உள்ள சகல துறைமுகங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்குள் எந்தவொரு சட்டவிரோத சக்தியும் அத்துமீறி பிரவேசிக்க முடியாது என அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் விமான நிலையத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுத்ததாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி கூறினார். இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் அல்லது பலியாகியுள்ளார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment