உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து நாடு எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்படுவதில்லை என சிங்கள பௌத்த தலைமைப் பீடமான அஸ்கிரிய பீடம் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வாசுதேவ நாணயக்கார, அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய தேவை தமது அணிக்கு இல்லையென்று கூறினார்.அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் அதற்கு ஆதரவாக வாக்களிக்க எங்களுக்கு தேவை இருக்கவில்லை. அந்த நிலைப்பாட்டில் தான் நாங்கள் செயற்பட்டோம் என்பதே எனது கருத்து. எனினும் தனிப்பட்ட காரணங்களால் என்னைப் போன்று அன்றைய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பங்கேற்ற முடியவில்லையா என்பது வேறு கதை. எனினும் இதற்கு நாங்கள் எதிர்ப்பு வெளியிடப்போவதில்லை என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தோம். ஆனால் அதற்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்பார்க்கவில்லை.
அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுவதில்லை என்பது மாத்திரமே எமது நிலைப்பாடு. அவசரகால சட்டம் நீடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் மாத்திரமே இருக்க முடியும். நாங்கள் அரசாங்கம் அல்லவே. எதிர்க்கட்சி என்ற ரீதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்பதை மாத்திரமே எம்மால் இப்போது கூறமுடியும் என்றார்.
No comments:
Post a Comment