Tuesday, April 30, 2019

இலங்கையின் இராணுவத்துக்கு சரியான தலைமைத்துவம் வழிகாட்டினால் வெளிநாட்டு இராணுவ உதவி இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும்: மகிந்த ராஜபக்ஷ!

இலங்கையின் இராணுவத்துக்கு சரியான தலைமைத்துவம் வழிகாட்டினால், வெளிநாட்டு இராணுவ உதவி இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
சீ.என்.என்னிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த விபரங்களை இந்த அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்தது. ஆனால் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்த அவதானம் செலுத்த தவறிவிட்டனர்.
இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி இருக்கிறது. அதன் புலனாய்வுத் தகவல்களும் இலங்கைக்கு ஏலவே கிடைக்கப்பெற்றுள்ளன.
 
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா என எந்த நாடானாலும் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புமாறு கோரினால் அந்த நாடுகள் இராணுவத்தை அனுப்பும். ஆனால் இலங்கையில் இருப்பது 30 வருடகால யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவம். அவர்களால் இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும். ஆனால் இயலுமை மிக்க தலைமைத்துவம் ஒன்று அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

1 comment: