கொடூர குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாகத் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, இலங்கையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கலவர தடுப்பு போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான போலீசார் விமான நிலையத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் இந்தியக் கடலோரக் காவல்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக இந்திய - இலங்கை எல்லையில் கண்காணிப்புப் பாதுகாப்பு விமானமான டார்னியர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
No comments:
Post a Comment