Tuesday, April 23, 2019

முஸ்லிம் சமூகத்திற்குள்ளே அடிப்படைவாதத்தைப் புகுத்தி, தீவிரவாதத்தை பரப்பும் நோக்கிலே சிலர் - பொதுபலசேனா

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேணிவருபவர்கள் என்பதுடன், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றி வருகின்ற இனத்தவர்களாவர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே அடிப்படைவாதத்தைப் புகுத்தி, தீவிரவாதத்தை பரப்பும் நோக்கிலே சிலர் செயற்பட்டு வருவதாக நாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம்.
 
அதனைக் கருத்திற்கொள்ளாமல் நாங்கள் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். அந்த அலட்சியத்தின் விளைவால் இன்று அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்று பொதுபலசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து பொதுபலசேனா அமைப்பினர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
 
நாங்கள் பொதுபலசேனா அமைப்பை ஸ்தாபித்த போது சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாத்திரமே குரல் எழுப்பி வந்தோம். ஆனால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எம்மைச் சந்தித்து, தமது சமூகத்திற்குள் தீவிரவாதத்தை மையப்படுத்திய செயற்பாடுகளை சிலர் நெறிப்படுத்துவதாகவும் அவை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து இத்தகைய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றி தகவல் சேகரித்து, அவற்றை நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.
 
அவ்வாறு நாங்கள் சேகரித்த தகவல்களில் அகில இலங்கை தௌஹீத் ஜமாத், இலங்கை தொஹீத் ஜமாத் உள்ளிட்ட இன்னும் சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள், அவற்றின் தலைவர்கள், அவர்களது முகவரிகள் உள்ளிட்ட பல விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவற்றை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கையளித்திருந்தோம்.
அவை குறித்து ஆராய்ந்த அவர் நாங்கள் வழங்கிய தகவல்கள் உண்மையானவை என்று ஏற்றுக்கொண்டிருந்தார்.
 
எனினும் அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதால், இன்னமும் 3 வருடகாலத்தில் இத்தகைய முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிப்பதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தோம்.
ஆகவே எமது எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அப்பாவி மக்களின் உயிர் காவுகொள்ளப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.
 
நாங்கள் வழங்கிய தகவல்களில் குறிப்பிட்டிருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பிலிருந்து பிரிந்த அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பின் மூலமாகவே தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் காணப்படும் அதேவேளை, அத்தகைய அமைப்புக்களில் பயிற்சி பெற்றவர்களாகவு இருக்கின்றனர்.
அதேபோன்று குண்டுத்தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மொஹமட் இப்ராஹிம் என்பவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மிக நெருக்கமானவர் என்பதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராகவு பரிந்துரை செய்யப்பட்டிருந்தவராவார்.
எனவே இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல்வாதிகளின் ஆதரவு காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

No comments:

Post a Comment