Friday, April 26, 2019

சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் 6 பேர் கைது!

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர்கள் வர்த்தகர்களாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி !

முல்லேரியாவ – ரணபிம மாவத்தையில் இரண்டு உந்துருளிகளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7.40 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது கெப்வண்டியை வீட்டில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்ட வேளை எதிரே வந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
 
தர்கா நகரில் இளைஞன் கைது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு என சந்தேகம்- பொலிஸ்!
 
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் அளுத்கம தர்கா நகரிலுள்ள அவரின் வீட்டில் வைத்து அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
24 வயதுடை இந்த நபர் தொடர்பாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்ததாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
கணனி தொடர்பில் அறிவுள்ள இவர், இணையத்தளம் ஊடாக ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment