அதிக மழைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 163 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் சன்முகநாதன் இன்பராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பலத்த மழைக் காரணமாக மண்முனை வடக்கு பகுதியில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் சன்முகநாதன் இன்பராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் மழைக் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 800 இற்கும் மேறபட்டோர் பாதிக்கப்ப்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழைக் காரணமாக 72 பிரதான நீர்த்தேக்கங்களில் ஏழு நீர்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் சில நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வான் பாயும் நிலையை அண்மித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான் பாயும் நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த பகுதிகளிலுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கிரான் – தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை, திகிலிவட்டை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக இப்பிரதேசங்களுக்கான தரை வழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
No comments:
Post a Comment