Monday, January 18, 2016

அதிகாரப் பரவலாக்கலானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
 
நாரேஹன்பிட்டி அபேராம விஹாரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
 
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். ஆனால் இவ்வாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள் நெகிழ்வுத்தன்மையுடன் அமையுமமென எதிர்பார்க்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாக்குறுதியை முன்வைத்திருந்தோம். கடந்த 2011 ஆம் ஆண்டு நிமால் சிறிபால டி. சில்வா தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு வொன்று உருவாக்கப்பட்டது.
 
இதில் அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதற்கு ஆணை வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பு தற்போது புதிய அரசாங்கத்திற்கு சென்றுள்ளது. புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய வாக்குறுதியாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மாற்றியமைக்கும் செயற்பாடு காணப்படுகிறது. கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டமானது ஜனாதிபதி முறைமையில் சில அதிகாரங்களை குறைப்பதாக அமைந்திருந்தது. ஆனால் ஜனாதிபதியின் முக்கிய அதிகாரங்கள் இன்னும் நீடிக்கின்றன.
 
புதிய அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் முக்கியமானவையாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குதலும், தேர்தல் முறையை மாற்றியமைப்பதுமே காணப்படுகின்றன. ஆனால் புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதகாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது.
விசேடமாக பொலிஸ் அதிகாரமானது இலங்கையில் எக் காரணம் கொண்டும் மாகாணங்களுக்கு வழங்க முடியாது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது சாத்தியமாக இருக்கும். இலங்கையை விட பல மடங்கு பெரியதான தமிழ் நாட்டிலேயே ஒரு பொலிஸ் படையே காணப்படுகின்றது. அதனால் இந்திய முறைமையானது இலங்கைக்கு எந்தவகையிலும் ஏற்புடையதல்லஎன்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment