Friday, September 18, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமே மக்கள் பலம் உள்ளது : வாசுதேவ நாணயக்கார!

Friday, September 18, 2015
இலங்கை:ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமே இருப்பதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த இரண்டு கட்சிகளினதும் உத்தியோகபூர்வ அதிகாரம் மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில்  இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கூட்டமைப்பினுள் இருந்து கொண்டு உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு எதிராக மக்கள் பலத்தை ஒன்று சேர்ப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் புதிய இலச்சினையின் கீழ் போட்டியிடுவதற்கான தயார் நிலைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு கோரி 56 நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்து அடங்கிய கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

எனினும், இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, 32 அல்லது 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சியில் அமரவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்காரணமாக தமது கூட்டணிக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு கோரி சபாநாயகருடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றம் வரை செல்ல நடவடிக்கை எடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment