Friday, September 18, 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கு காரணம் அமெரிக்காதான்: சிரியா அதிபர் குற்றச்சாட்டு!

Friday, September 18, 2015
டமாஸ்கஸ் - சிரிய நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருக்கவும்  என்று சிரிய அதிபர் பஷார்-அல்-ஆசாத் சூசகமான கருத்தை தெரிவித்தார்.
 
இது குறித்து ரஷ்ய நாட்டு பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறும்போது, "ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகளை கண்டுகொள்ளவில்லை என்பது தற்போதைய பிரச்சினை அல்ல. உண்மையில் உங்களுக்கு என் மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருங்கள். அகதிகளின் நிலைப்பாடும் இதுதான். தீவிரவாதம் மட்டுமே பிரச்சினை என்பதை புரிந்துகொள்ளுங்கள்  என்றார்.
 
சிரியாவின் நிலைமைக்கு பொறுப்பேற்று பதவி விலகத் தயாரா என்ற கேள்விக்கு, "நாட்டின் அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நானும் அப்படித்தான் பதவிக்கு வந்தேன். அந்த மக்களே அதிபர் வேண்டாம் என நினைத்து முடிவு செய்தால்தான் நான் பதவி விலகுவேன். அமெரிக்கா விரும்புகிறது என்பதற்காகவோ, ஐ.நா. கவுன்சில் ஆசைப்படுகிறது என்பதற்காவோ நான் பதவி விலக மாட்டேன். மக்கள் விரும்பும்வரை சிரிய நாட்டு அதிபராக தொடர்வேன். அவர்கள் வேறு மாதிரி விரும்பினால் வேறு வழியில்லை. உடனடியாக பதவி விலகியே தீர வேண்டும்.
 
ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும்தான். அந்த தீவிரவாத அமைப்பை அழிக்கவும் வளர்வதை தடுக்கவும் இந்த நாடுகள் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றார். சிரியா அதிபர் பஷார்-அல்-ஆசாத் படைகளுக்கு தேவையான ராணுவ உதவிகளை ரஷ்யா வழங்கி வருவதாக அமெரிக்கா முன்னதாக தெரிவித்ததை அடுத்து சிரிய அதிபர் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment